14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பண்டரிபுரத்தில், வீர சைவ மரபில் தோன்றிய அருளாளர் நரஹரி. அண்டர் நாயகனான சிவபெருமானை முப்போதும் போற்றித் துதித்து மகிழ்வார்; பொற்கொல்லராகப் பணிபுரிந்து வரும் இவர் எந்நேரமும் சித்தத்தை சிவமூர்த்தியிடம் வைத்துத் திருஐந்தெழுத்து மந்திரத்தைக் காதலுடன் ஓதி வரும் தன்மையினால் பக்திப் பயிர் மெதுமெதுவே முதிர்ந்து வருகின்றது. மற்றொரு புறம் பாண்டுரங்கப் பெருமானின் திருநாமத்தினைக் கேட்டாலே பதறுவார், பண்டரிபுர ஆலய திசையில் தலை வைத்தும் படுக்க மாட்டார்; ஆலய கோபுரத்தினைத் தரிசிக்கவே கூடாது என்று உறுதி பூண்டிருந்தார், பாண்டுரங்கனுக்கு உற்சவக் கொடியேற்றும் காலங்களில் வெளியூருக்குச் சென்று தங்கி விடுவார்.
ஒரே தெய்வத்தை முழு ஈடுபாட்டுடன் வழிபட்டு அந்நெறியிலேயே உறுதி மாறாது நிற்பதென்பது நம் இந்து தர்மத்தில் பரிபூரணமாய் அங்கீகரிக்கப் பெற்றுள்ள மரபாகும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் இத்தகைய உத்தம நெறியில் நிலைநின்று தான் முத்திப் பேறு பெற்று வந்துள்ளனர். எனினும் ஏக தெய்வ வழிபாட்டு முறையில் இந்து தர்மத்தின் பிற தெய்வ வடிவங்களைத் துவேஷிக்காமல் சரியான புரிதலுடன் பயணிக்க வேண்டியது அவசியமாகின்றது. இல்லையெனில் நம் வழிபடு தெய்வத்தின் மீதுள்ள பக்தி மெதுமெதுவே குறைந்துப் பிற தெய்வங்களிடத்து உள்ள கோபம் மட்டுமே பிரதானமாகி நம்மை பக்தியின் கீழ்நிலைக்கு சர்வ நிச்சயமாய் இட்டுச் சென்று விடும்.
முதிர்ந்த பக்தியுள்ள அடியவர் பெருமக்கள் இவ்விதம் தவறான வழியில் பயணிக்கத் துவங்கும் பொழுது இறைவன் தனது திருவிளையாடல்களின் மூலம் அவர்களை நன்னெறிப்படுத்தி வருவது கண்கூடு. ஒரு சமயம் பாண்டுரங்க மூர்த்திக்கு வைரங்கள் பதிக்கப்பட்ட பொன் அரைஞான் செய்து தருமாறு வணிகரொருவர் வேண்டுகின்றார். நரஹரிக்கோ தூக்கி வாரிப் போடுகின்றது, எனினும் 'சரி! செய்து தருகின்றேன், ஆனால் நீங்களே சென்று அளவு எடுத்து வர வேண்டும், நான் வருவதற்கில்லை' என்ற நிபந்தனையுடன் உடன்படுகின்றார்.
வணிகர் பண்டரிநாதரின் திருஇடை அளவினை எடுத்து வர, நரஹரியும் திருஆபரணத்தை நேர்த்தியாகச் செய்து முடிக்கின்றார். இருப்பினும் வணிகர் அதனை ஆலயத்திலுள்ள மூர்த்திக்கு அணிவிக்க முயல்கையில் சுற்றளவு சிறிது குறைந்து காணப்படுகின்றது, நரஹரிக்கோ வியப்பு! மீண்டும் சரிசெய்து கொடுத்து அனுப்புகின்றார், இம்முறை சுற்றளவு சிறிது அதிகமாகத் தோன்றுகின்றது. இறுதியில் வணிகர் மற்றும் ஊர்மக்களின் நிர்பந்தத்தால் கண்களைக் கட்டிக் கொண்டு நரஹரியே அளவெடுக்க ஆலயக் கருவறைக்குள் நுழைகின்றார்.
மெதுவே விக்கிரகத் திருமேனியைத் தடவிப் பார்க்கையில் இவருக்குத் தட்டுப்படுவதோ ஆலமுண்ட அண்ணலின் மான்; மழு மற்றும் ருத்ராக்ஷ மாலைகளே, பட்டு வஸ்திரங்களுக்குப் பதிலாக புலித்தோலையே உணர்கின்றார். அதிர்ந்து கண்கட்டினை நீக்கிப் பார்த்தால் பாண்டுரங்கப் பெருமான் ஒப்புவமையில்லா மோகனப் புன்னகையுடன் திருக்காட்சி தந்தவண்ணம் நிற்கின்றார். பதறி மீண்டும் கண்களைக் கட்டித் துழாவினால் அகக் கண்களில் முக்கண் முதல்வரின் திருச்சின்னங்களே தென்படுகின்றது.
நரஹரிக்கு சித்தம் தெளிகின்றது; சாஷ்டாங்கமாக பாண்டுரங்கப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்துக் கதறுகின்றார், பிழை பொறுக்குமாறு வேண்டித் தொழுகின்றார், கருணைப் பெருவெள்ளமான பண்டரிநாதரும் நரஹரிக்கு அசரீரியாய் ஆசி கூறி அருள் புரிகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!
No comments:
Post a Comment