திருநீர்மலையில் ஒரு அற்புத தரிசனம்:

108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது, திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, அடிவாரக் கோயிலில் நீர்வண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார், மற்றொரு தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அன்னை சீதை இலக்குவன் இருவருடனும் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார், வால்மீகி முனிவர் அருள் பெற்றுள்ள ஆலயம். 
மலைக்கோயிலில் ரங்கநாதப் பெருமாள் எழுந்தருளியுள்ளார், ஆச்சரியமான (கிடந்த) திருக்கோலம். பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர் அருள் பெற்றுள்ளனர், மேலும் இக்கோயிலில் உலகளந்த பெருமாள் (நடந்த திருக்கோலம்) மற்றும் சாந்த நரசிம்ம மூர்த்தி (இருந்த திருக்கோலம்) ஆகியோர் எழுந்தருளி இருக்கின்றனர். இங்கிருந்து இப்பகுதி முழுவதையும் தரிசித்து மகிழலாம். 
திருமங்கை ஆழ்வார் இத்தலத்திற்கு வருகை புரிகையில், இத்தலம் முழுவதும் நீரினால் சூழப்பட்டிருக்க, நீர் வடியட்டும் என்று எதிரிலுள்ள மற்றொரு மலையில் 6 மாதங்கள் உறுதி மாறாத காதலுடன் காத்திருந்துப் பின்னர் பரந்தாமனின் 4 திருக்கோலங்களையும் தரிசித்து மகிழ்ந்துள்ளார், அவசியம் தரிசித்துப் போற்ற வேண்டிய திருத்தலம்.

திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் தரிசனம்:

கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவான்மியூரிலிருந்து மகாபலிபுரம் செல்லும் மார்க்கத்தில், மாமல்லபுரத்திற்கு 20 கி.மீ முன்னர், வலது புறம் திருவிடந்தை திருக்கோயிலுக்கான வளைவினைக் காணலாம். ஏகாந்தமான சூழலில் அமைந்துள்ள திருத்தலம், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது, ஓரளவு விசாலமான திருக்கோயில் வளாகம். மூலக் கருவறையில், நெடிதுயர்ந்த பிரமாண்டமான திருமேனியில் ஆதிவராகப் பெருமாள் அகிலவல்லித் தாயாரை இடது திருத்தொடை மீது தாங்கியவாறு, ஒரு திருவடியை நிலத்திலும், மற்றொரு திருவடியை ஆதிசேடனின் சிரசிலும் ஊன்றிய வண்ணம் பிரத்சயட்சமாய் எழுந்தருளி இருக்கின்றார், காண்பதற்கரிய திருக்கோலம். 
காலவ ரிஷி என்பாருக்குப் பூமி தேவித் தாயாரின் அம்சமாய் 360 பெண்கள் பிறக்க, அவர்களை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளிடம் அனுதினமும் விண்ணப்பித்து வருகின்றார், தக்கதொரு சமயத்தில் வராகப் பெருமான் ஒரு பிரம்மச்சாரியின் வடிவு தாங்கி ரிஷியின் இல்லம் நாடிச் செல்கின்றார், பரந்தாமனின் திருத்தோற்றப் பொலிவுடன் தோன்றிய காரணத்தால், திருவருள் ஏவ, காலவ ரிஷி அந்த இளைஞனிடம் தம்முடைய புதல்விகளை மணக்குமாறு விண்ணப்பிக்க, இளைஞன் வடிவிலிருந்த பெருமானும் ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணினை மணப்பதாக வாக்களித்து ஒரு வருட நிறைவில் அனைவரையும் மணம் புரிந்தருளி இறுதியில் அப்பெண்கள் யாவரையும் ஓருருவாய் இணைத்துத் தம்முடைய திருத்தொடையினில் தாங்கியவாறு திருக்கோல தரிசனம் அளித்து அருள் புரிகின்றார், ஆதலின் நித்யகல்யாணப் பெருமாள் எனும் திருநாமமும் பெறுகின்றார்.   
பாற்கடல் வாசினியான அன்னை மகாலட்சுமி மற்றுமொரு திருச்சன்னிதியில் கோமளவள்ளித் தாயார் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றாள், அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.