ஸ்ரீரங்க விமானம் தோன்றிய அற்புத வரலாறு:

எண்ணிறந்த யுகங்களுக்கு முன்னர் நான்முகக் கடவுளின் தவப் பயனாய் ஸ்ரீரங்க விமானம் பாற்கடலினின்றும் தோன்றுகின்றது, அதனுள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமான் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். பிரமன் அவ்விமானத்தினைச் சத்திய லோகத்தில் பிரதிஷ்டை செய்து நியமத்துடன் பூசித்து வருகின்றார். பின்னர் நான்முகனார் சூரிய தேவனைப் பூசைக்கென நியமிக்கின்றார்; சூரிய தேவன்; வைவஸ்வத மனு ஆகியோரால் வழிவழியாய்ப் பூசிக்கப் பெறும் திருவரங்கன் இறுதியாய் மனுவின் புதல்வரான இஷ்வாகுவால், சத்திய லோகத்திலிருந்துப் பூவுலகிலுள்ள அயோத்திக்கு எழுந்தருளி வருகின்றார்.
இஷ்வாகுவின் காலத்திற்குப் பிறகு அந்த வம்சத்தினர் வழிவழியாய்ப் பெரிய பெருமாளைப் பூசித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, திரேதா யுகம் முடிவுற சுமார் 11,000 ஆண்டுகளே மீதமிருக்கும் காலகட்டத்தில், இஷ்வாகு வம்சத்தில் அவதரிக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருவரங்கப் பெருமானைப் பூசித்து வருகின்றார்.
இராவண வதத்திற்குப் பின் நடந்தேறும் பட்டாபிஷேக வைபவத்தில் விபீஷணருக்கு ஸ்ரீரங்க விமானத்தினைத் தன்னுடைய அன்புப் பரிசாக அளித்து மகிழ்கின்றார் ஸ்ரீராமர். பெருமகிழ்வுடன் திருவரங்கனுடன் ஆகாய மார்க்கமாய் இலங்கை நோக்கிப் பயணிக்கின்றார் விபீஷணர், தென்பகுதியிலுள்ள காவிரிப் பகுதியைக் கடக்கையில், அனுஷ்டானத்தின் பொருட்டு விமானத்துடன் தரையிறங்குகின்றார். அப்பகுதியினை ஆண்டு வரும் தர்மவர்மன் விபீஷணரை எதிர்கொண்டு வரவவேற்கின்றார், காவிரிக் கரையருகிலேயே அரங்கனுக்குப் உத்சவம் நடத்துவிக்க அனுமதி கோருகின்றார்.
இவ்வாறாகத் திருவரங்கனுக்கு ஆதி பிரம்மோத்சவம் பங்குனி மாதத்தில் சிறப்புற நடந்தேறுகிறது. உத்சவ முடிவில் விபீஷணர் எவ்வளவு முயன்றும் ஸ்ரீரங்க விமானம் அசைய மறுக்கின்றது, கருணைக் கடலான திருவரங்க மூர்த்தி தான் அவ்விடத்திலேயே எழுந்தருள இருப்பதாக அறிவித்து அருள்கின்றார். பெரிதும் மகிழும் தர்மவர்மரும் அவ்விடத்திலேயே ஆலயமொன்றினை அமைகின்றார்.
இந்நிகழ்வு நடந்தேறி பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கால மாற்றத்தினால் உண்டாகும் வெள்ளப் பெருக்கினால் அலையுண்டுப் பின் நிலத்தில் முழுவதுமாய் புதையுண்டும் விடுகிறது. மேலும் எண்ணிறந்த ஆண்டுகள் கடந்த பின்னர் அவ்விடத்திற்கு வருகை புரியும் கிள்ளிவளவன் எனும் மன்னன் 'இரு தெய்வீகக் கிளிகளின் உரையாடல் மூலம்' ஸ்ரீரங்க விமானம் அப்பகுதியில் புதையுண்டிருப்பதை அறிகின்றான். திருவரங்கனும் அரசனின் கனவினில் தோன்றித் தான் இருக்குமிடத்தினைக் காண்பித்து அருள்கின்றார்.
திருவரங்கனின் திருவருள் திறத்தினை வியந்து போற்றும் கிள்ளிவளவன் ஸ்ரீரங்க விமானத்தை மீட்டெடுத்து அவ்விடத்திலேயே அறிதுயில் கொண்டருளும் பரந்தாமனுக்கு ஆலயமொன்றினைப் புதுக்குகின்றான். பின்னர் வழிவழியாய் அப்பகுதியினை ஆண்டு வருவோரும் மற்றோரும் திருவரங்கத் திருக்கோயிலுக்குத் திருப்பணி புரிந்து வருகின்றனர். இத்தகு சீர்மை பொருந்திய ஸ்ரீரங்க ஷேத்திரத்தின் பிரபாவத்தினை ஆயிரம் பதிவுகளினாலும் முழுவதும் விவரித்து விட இயலாது (நமோ நாராயணாய)!!!