பண்டரிபுர ஷேத்திரத்திற்கு எப்படிச் செல்வது?

மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள 'சோலாப்பூர்' மாநகரம் வரையிலும் இரயிலில் பயணித்துப் பின் அங்கிருந்து இரயில்; பேருந்து; கார் என்று ஏதேனும் ஒன்றில் சுமார் 70 கி.மீ பயணித்துப் பண்டரிபுர ஷேத்திரத்தினை அடைவதே பிரசித்தமான பயண மார்க்கம். 

விமான மார்க்கமெனில், பூனே வரையில் விமானத்தில் பயணித்துப் பின் அங்கிருந்து இரயில்; பேருந்து; வாகனங்கள் என்று ஏதேனும் ஒரு பயண மார்க்கத்தில் சுமார் 200 கி.மீ பயணித்து விட்டலனின் ஷேத்திரத்தினை அடையலாம். 

பூனேவிலிருந்து சோலாப்பூர்; குருத்வாடி எனும் இரு ஊர்கள் வரையில் இரயில் வசதி உண்டு, அங்கிருந்து பேருந்து அல்லது வாகனங்கள் மூலமாகவும் பண்டரிபுரத்தினை அடையலாம். குருத்வாடியிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது பண்டரிபுரம். பண்டரிபுர தலத்திலேயே சிறு இரயில் நிலையம் ஒன்று உள்ளது, பிற மாநிலங்களிலிருந்து நேரடியாக இதற்கு இரயில் வசதி கிடையாது எனினும் சோலாப்பூர்; குருத்வாடி ஊர்களிலிருந்துக் குறிப்பிட்ட நேரங்களில் சில இரயில்கள் இங்கு செல்வதுண்டு. 

கொரோனா சூழல் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் பண்டரிபுரத்திற்குச் சென்று தரிசித்து வரலாமே!!

பண்டரிபுரத்திற்கு எப்படிப்பட்ட மனநிலையில் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் ?

பொதுவில் எந்தவொரு ஷேத்திரத்திற்கு யாத்திரை மேற்கொள்வதற்கு முன்னரும், தல புராணத்தையும்; தலத்தின் மூல மூர்த்தி எக்காலத்தில் எக்காரணமாக அங்கு கோயில் கொண்டார் போன்ற விவரங்களையும் முறையான பிரமாண நூலின் துணை கொண்டு அறிதல் வேண்டும், மேலும் எந்தெந்த அடியவர்களுக்கு அந்த ஷேத்திரத்தில் இறைவர் திருவருள் புரிந்துள்ளார் என்று அறிந்து கொண்டுப் பின் அந்த அருளாளர்களின் அவதார நிகழ்வுகளையும் முயன்றுப் பயிலுதல் வேண்டும். தலத்தின் சிறப்பு குறித்த பல்வேறு உபன்யாசங்களைப் பலமுறை கேட்டு மகிழ்தல் வேண்டும். 

பாற்கடல் வாசனான ஸ்ரீமகாவிஷ்ணு கண்ணனாக; இராமனாக; நரசிம்மராக; ஸ்ரீநிவாசராக; வைகுந்த வாசனாக எழுந்தருளியுள்ள எண்ணிறந்த புண்ணிய ஷேத்திரங்களுள் பண்டரிபுரம் தனித்துவம் வாய்ந்ததாகப் போற்றப் பெறுகின்றது. வைணவ ஷேத்திரங்களுள் அடியார்க்கு எளியரான மூர்த்தி யார்? என்றொரு போட்டி வைத்தால் மிக எளிதாக பாண்டுரங்கப் பெருமான் முதல் பரிசினைத் தட்டிச் சென்று விடுவார். எந்நேரமும் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த புண்ணிய பூமியின் ஒவ்வொரு அணுவிலும் விட்டலன் நிறைந்து இருக்கின்றான், அங்கு அருள் பெற்றுள்ள அடியவர்களின் பட்டியல் மிகமிக நீளமானது. 
நர்மதா பதிப்பகத்தின் 'ஸ்ரீமகா பக்த விஜயம்' எனும் நூலினை எத்தகைய பிரயத்தனம் மேற்கொண்டாவது வாங்கி வைத்துக் கொள்ளுதல் வேண்டும், பொக்கிஷமெனப் போற்றிப் பேண வேண்டிய நூலிது. சென்னை மயிலாப்பூரின் கிரி டிரேடிங் சென்டரில் இந்த நூல் கிடைக்கின்றது (விலை 350 ருபாய்). இணையத்திலும் கூகுள் ஈபுக் வடிவில் கிடைக்கின்றது. பரந்தாமனின் அடியவர்களுள் பிரசித்தமான 82 அடியவர்களின் அற்புத வரலாற்றினை எளிய இனிய தமிழில் இந்நூல் நமக்கு எடுத்துரைக்கின்றது. குறிப்பாக, பண்டரிபுர யாத்திரைக்கு முன்னர், இந்நூலிலிருந்துக் கீழ்க்குறித்துள்ள 25 அடியவர்களின் வரலாற்றினைப் பயிலுதல் வேண்டும், இவர்கள் யாவரும் பாண்டுரங்க மூர்த்தியின் பேரருள் பெற்ற புண்ணிய சீலர்கள்,

பக்த நாமதேவர்
பக்த ஞானேஸ்வரர்
பக்த சக்குபாய் 
பக்த புரந்தரதாசர் 
பக்த போசலபாவா 
பக்த தாமாஜி பண்டிதர் 
பக்த கோராகும்பார் 
பக்த துக்காராம் சுவாமிகள் 
பக்த சோகாமேளர் 
பக்த ஏகநாதர் 
பக்த புண்டரீகர் 
பக்த பானுதாசர் 
பக்த ராகா கும்பார் 
பக்த பரிச பாகவதர் 
பக்த நரஹரி 
பக்த ஜனாபாய் 
பக்த கானோபாத்திரை 
பக்த சாந்தோபா 
பக்த மிருத்யுஞ்ஜயர் 
பக்த கூபாகும்பார் 
பக்த சேனா நாவிதர் 
பக்த கூர்ம தாசர் 
பக்த கணேசநாதர் 
பக்த நீளோபா
பக்த கோமாபாய் 

பண்டரிபுர ஷேத்திரத்திற்கு குறைந்தது 3 நாட்களுக்காவது பயணத் திட்டத்தினை வகுத்துக் கொள்ளுதல் வேண்டும், சந்திரபாகா நதிக்கரையில் அமர்ந்து மேற்குறித்துள்ள 25 அடியவர்களின் சரிதங்களை மீண்டுமொரு முறை நினைவு கூர்தல் வேண்டும். சந்திரபாகா ஸ்னானம் பரம புண்ணியமானது, சகல விதமான தோஷங்களையும் போக்கவல்லது. பண்டரிபுரத்தில் ஏகாதசி விரதமிருந்து வழிபடுதல் எண்ணிலடங்கா புண்ணியப் பலன்களைப் பெற்றுத்தர வல்லது. அத்தலத்தில் நடந்தேறும் பஜனைகள் மற்றும் நாம சங்கீர்த்தன வைபவங்களில் அவசியம் கலந்து கொண்டு அனுபவித்தல் வேண்டும், பாண்டுரங்கன் சர்வ நிச்சயமாய் அக்கூட்டங்களில் எழுந்தருளி இருப்பான்.

மேற்கூறிய குறிப்புகளை நினைவில் இருத்தி ஒரு நெகிழ்வான மனநிலையில் பண்டரிபுர தலத்தினைத் தரிசித்துத் திருவருளைப் பெற்று இன்புறுவோம் (சிவ சிவ)!!!!

பண்டரிபுர வார்க்கரி யாத்திரை:

ஆண்டுதோறும் ஆஷாட ஏகாதசி சமயத்தில், பண்டரிபுர குருபரம்பரையின் தனிப்பெரும் குருநாதரான ஞானேஸ்வரரின் மகாசமாதித் தலமான ஆலந்தியிலிருந்தும், துக்காராம் மகராஜின் முத்தித் தலமான தேஹூவிலிருந்தும் சுமார் 15 லட்சம் அடியவர்கள் கடல் போல திரண்டு, 20 நாட்களில் 230 கி.மீ பாத யாத்திரையாக, விட்டல பஜனை செய்து கொண்டும், ஆடிப் பாடி நாம சங்கீர்த்தன வைபவத்தில் ஈடுபட்டும், ஆங்காங்கே சாலையோரங்களிலேயே சிறுசிறு கூடாரங்களில்  தங்கிக் கொண்டும் ஏகாதசிக்கு முன்தினம் பண்டரிபுர ஷேத்திரத்தினை அடைவர். ஏகாதசியன்று சந்திரபாகா நதியில் புண்ணிய நீராடி நல்விரதமிருந்து விட்டலனின் பரிபூரணத் திருவருளைப் பெற்று மகிழ்வர் (இவ்வருட ஆஷாட ஏகாதசி தினம் ஜுலை 21 2021).

பக்த புண்டரீகர் (பண்டரிபுர ஷேத்திரம் உருவான அற்புத வரலாறு):

மஹாராஷ்டர மாநிலத்தில் பீமா நதிக்கரைப் பகுதியில் தோன்றிய அருளாளர் புண்டரீகர். இளம் பிராயத்தில் கல்வி கேள்விகளில் அக்கறையின்றித் திரிகின்றார், தாய் தந்தையரின் சொல்லை ஒருசிறிதும் பொருட்படுத்தாது அவர்களை எந்நேரமும் நிந்தித்தும் வருகின்றார். திருமண வாழ்வினாலும் புண்டரீகரின் உள்ளத்தில் யாதொரு மாற்றமுமில்லை, இல்லறத்தில் இருந்த நிலையிலும், விலைமாதரின் இல்லமே கதியென்று உழல்கின்றார். 

ஒரு சமயம் புண்டரீகரின் பெற்றோர் காசி யாத்திரை மேற்கொள்கின்றனர், அவர்கள் சென்று சில நாட்களுக்குப் பின்னர் புண்டரீகருக்கும் காசி செல்லும் விருப்பம் தோன்ற மனைவியுடன் இருவேறு குதிரைகளில் புறப்படுகின்றார். சில நாட்கள் பயணத்திற்குப் பின் தொலைதூரத்தில் பெற்றோர்கள் சில யாத்ரீகர்களோடு நடந்து கொண்டிருப்பது தெரிய, அவர்கள் கண்களில் படாமல் செல்ல மாற்றுப் பாதை என்று கருதித் தவறான பாதையொன்றில் பயணித்துச் செல்கின்றார். 

அவ்வழியில், பண்டைய தவப் பயனால், பெற்றோரின் சேவையே பெரிதெனக் கொண்டிருந்த குக்குட முனிவரின் தரிசனம் புண்டரீகருக்குக் கண நேரம் கிட்டுகின்றது. அந்த தரிசனப் பயனால் மறுநாள் அதிகாலை அதே முனிவரின் ஆசிரம வாயிலில் கங்கா; யமுனா; சரஸ்வதி ஆகிய நதி தெய்வங்களைத் தரிசிக்கப் பெற்றுப் பணிகின்றார். புனித நீராடுவோர் தங்களிடம் விட்டுச் செல்லும் பாவங்களைக் குக்குட முனிவரின் தரிசனத்தால் போக்கிக் கொள்ள வந்திருந்த அம்மூன்று தேவியரின் வாயிலாக 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' எனும் வாக்கிய விளக்கத்தையும், பெற்றோர் சேவையினால் சிறப்புற்று விளங்கும் குக்குட முனிவரின் பெருமையையும் அறிந்து கொண்டு சித்தம் தெளிகின்றார்.   

இது நாள் வரையில் பெற்றோருக்குச் செய்து வந்த அபவாதத்தை எண்ணியெண்ணிப் பதைபதைக்கின்றார், விரைந்து சென்று காசியில் தாய்; தந்தையரைத் தரிசித்துத் திருவடிகளில் வீழ்ந்துப் பிழை பொறுக்குமாறு விண்ணப்பிக்கின்றார், மைந்தனின் மனமாற்றத்தினால் ஈன்றோர் பெரிதும் மகிழ்கின்றனர். அது முதல் எண்ணிறந்த ஆண்டுகள் தாய்; தந்தையரைக் கண்ணும் கருத்துமாய்ப் போற்றி அவர்கள் சேவையொன்றினையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு இல்லறம் பேணி வருகின்றார் புண்டரீகர். 

கோவர்த்தன கிரிதாரியான ஸ்ரீகிருஷ்ணன் புண்டரீகரின் பெற்றோர் சேவையினால் திருவுள்ளம் பெரிதும் மகிழ்ந்து அவருக்கு அருள் புரியும் திருநோக்குடன், தன் சுய உருவுடனேயே அவரின் இல்லம் நாடிச் சென்று 'புண்டரீகா' என்று அழைக்கின்றார். பெற்றோர் சேவையில் ஈடுபட்டிருந்த புண்டரீகர் வெளியில் எட்டிப் பார்க்கின்றார், அங்கு சிரசில் பொன் மகுடம்; திருநெற்றியில் கஸ்தூரி திலகம்; திருக்கழுத்தில் அணி செய்யும் முத்து மாலைகள்; திருமார்பில் கௌஸ்துப மணி; திருஇடையில் பீதாம்பரம்; மணிக்கட்டில் கங்கணம்; இரு திருக்கரங்களையும் திருஇடையில் வைத்திருக்கும் சர்வாலங்கார ஆனந்தத் திருக்கோலத்தில் கண்ணனைத் தரிசித்து மகிழ்கின்றார். 

'சுவாமி அந்த செங்கல் ஆசனத்தில் சிறிது எழுந்தருளி இருப்பீர், பெற்றோர் சேவையை முடித்துவிட்டு வருகின்றேன்' என்று உள்ளிருந்தவாறே குரல் கொடுக்கின்றார், கோகுலக் கண்ணனும் அங்கிருந்த செங்காலொன்றின் மீது பிறவிப் பிணிபோக்கும் தன் திருப்பாதங்களை ஊன்றிப் புண்டரீகருக்காகக் காத்திருக்கின்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்துத் திருவடிகளில் வீழ்ந்துப் பணியும் புண்டரீகரிடம் 'அன்பனே! பெற்றோர் சேவையின் மகத்துவத்தினை உன்னால் இவ்வையகம் உணரப் பெற்து, வேண்டும் வரங்களைக் கேட்பாய்' என்று அருள் புரிகின்றார். 

'சுவாமி, விட்டலன் எனும் திருநாமத்துடன், தாம் இதே திருக்கோலத்தில் இங்கு கோயில் கொள்ள வேண்டும், இங்கு ஓடும் பீமா நதி புனித கங்கைக்கு ஒப்பாகத் திகழ வேண்டும், அடியேனின் திருநாமத்தால் இத்தலம் புண்டரீகபுரம் என்று போற்றப் பெறுதல் வேண்டும்' என்று புண்டரீகர் பணிய 'அவ்வண்ணமே ஆகுக!' என்று திருவாய் மலர்ந்து அருள் புரிகின்றார், விட்டலன் எனும் அற்புதத் திருநாமம் பெற்றுள்ள பாண்டுரங்கப் பெருமான். பின்னர் காலவெள்ளத்தில் புண்டரீகபுரம் புண்டரீபுரம் என்று மாறிப் பின் தற்கால வழக்கில் பண்டரிபுரம் என்று அடியவர் பெருமக்களால் பெரிதும் போற்றப் பெற்று வருகின்றது.

பக்த கானோபாத்திரை (பாண்டுரங்கனோடு ஐக்கியமான பரம பாகவதையின் அற்புத வரலாறு):

15ஆம் நூற்றாண்டில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பண்டரிபுரத்திற்கு 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மங்களபட நகரில் (தற்கால வழக்கில் மங்கள்வேதா) தோன்றிய ஞானச் செல்வி கானோபாத்திரை. இவரின் தாயார் சியாமா ஆலயங்களிலும், அரசவையிலும் பக்திப் பாடல்களை இனிமையாகப் பாடியாடும் பண்பினர். கானோபாத்திரை சிறு பிராயம் முதலே பாண்டுரங்கப் பெருமானிடம் அதீத பக்தியும், ஈடுபாடும் கொண்டிருக்கின்றாள். பக்த மீராவைப் போலவே பண்டரிபுர தெய்வத்தைத் தன் கணவனாக வரித்து அன்பு செய்து வருகின்றாள்.  

மங்கைப் பருவமெய்தும் கானோவின் ஆடலையும், கீர்த்தனைப் பாடல்களையும்  கண்டோரும் கேட்டோரும் வியக்கின்றனர், கானோவின் சுந்தர வதனத்தையும், கலைத்திறனையும் கேள்வியுறும் அப்பகுதி அரசன் கானோவை அடைய விரும்புகின்றான். கானோவின் அன்னை மூலமாகத் தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்றான். கானோவோ 'அம்மா! பேரின்பம் பெற்றுத் தரும் பாண்டுரங்கனின் திருவடிகளைத் தவிர்த்துப் பிறிதொரு சிந்தனை எனக்கில்லை' என்று உறுதியோடு பகன்று அவ்வழி வரும் சில யாத்ரீகர்களோடுப் பண்டரிபுரம் சென்றடைகின்றாள்.
பாண்டுரங்கப் பெருமானின் திவ்ய தரிசனத்தில் தன்னிலை மறந்து ஆடுகின்றாள்; அகம் குழைந்து அழுது தொழுகின்றாள்; தம்புரா மீட்டி; சிப்ளா கட்டையால் தாளமிட்டுத் தன்னுடைய அற்புதப் பாடல்களால் அங்குள்ள அடியவர்கள் யாவரையும் மகிழ்விக்கின்றாள். சில நாட்களில் விவரமறிந்து அவ்விடம் வரும் அரசனின் ஏவலர் ஆலயத்துள் நுழைந்துக் கானோவிடம் 'தேவி! அரசர் தங்களை அவசியம் உடன் அழைத்து வரச் சொல்லி ஆணையிட்டுள்ளார்' என்று கூறுகின்றனர், உளம் கலங்கிய நிலையில் கானோ கருவறைக்குள்  செல்கின்றாள். 
'பாண்டுரங்கா! அடியவர்க்கு எளி வந்து அருளும் கருணைக் கடலே! இனியும் இந்த அபலையைச் சோதிக்காது உம்முடன் இணைத்துக் கொள்வாய் ஐயனே!' என்று உளமுருகி அழுது தொழுகின்றாள், கண நேரத்தில் பெருஞ்சோதியொன்று அங்கு தோன்றிக் கானோவின் ஆன்மாவைத் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொள்கின்றது. அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இவ்வதிசயத்தினைத் தரிசித்து வியக்கின்றனர், கானோவின் திவ்ய உடலை ஆலய வளாகத்தினுள்ளே புதைக்கின்றனர், மறுகணமே விருட்சமொன்று அவ்விடத்தே தோன்றி வளர்வது கண்டு ஆச்சரியம் அடைகின்றனர், முத்திப் பேறு பெற்றுள்ள கானோபாத்திரை அடியவர்களை பக்தி வழி நடத்த மீண்டும் விருட்சமாய் வளர்ந்து வந்துள்ளாள் என்றுணர்ந்துப் பணிகின்றனர். 

பண்டரிபுர ஆலயம் செல்லும் அன்பர்கள் இன்றும் ஆலய வளாகத்தில், விருட்சமாய் வளர்ந்துள்ள பரம பாகவதையான கானோபாத்திரையைத் தரிசிக்கலாம்.  இம்மரம் அமைந்துள்ள கோபுர வாயிலை அடியவர்கள் கானோபாத்திரை வாயில் என்று போற்றி மகிழ்கின்றனர்.

பக்த சோகாமேளர் (பண்டரிநாதனே நேரில் தோன்றி துவாதசிப் பாரணை உணவினை உண்டு அருள் செய்த அற்புத வரலாறு):

பண்டரிபுர எல்லையில், பஞ்சம மரபினர் எனும் எளிய குடிசைவாழ் மக்களின் மரபில் தோன்றும் அருளாளர் ஸ்ரீசோகாமேளர். நாயன்மார்கள் வரலாற்றில் இடம்பெறும் நம் நந்தனார் சரித்திரத்தைப் போன்றே, எவ்வித சுய ஒழுக்கமுமின்றி மது; மாமிசம்; வாயிலாப் பிராணிகளைப் பலியிடுவது என்று வாழ்ந்து வரும் அப்பகுதி குடிசை வாசிகளைத் தம்முடைய தொடர் போதனைகளால் பாண்டுரங்க பக்திக்கும் நல்லொழுக்கத்திற்கும் ஆட்படுத்தி வருகின்றார் சோகாமேளர். 

அனுதினமும் வைகறைப் பொழுதில் துயிலெழுந்து பீமா நதியில் நீராடி, வைணவ சமயிகளைப் போல் திருமண் தரித்துக் கொள்வார், பண்டரிபுர ஆலய எல்லையில் நின்ற வண்ணமே பாண்டுரங்கப் பெருமானை வணங்கி மகிழ்வார். இது பொறுக்காத அப்பகுதி மக்கள் அவரைக் கடுமையாய் நிந்தித்து 'இப்பகுதியில் இனியும் கால் பதிக்காதே' என்று தூற்றுகின்றனர். அதனால் உளம் வருந்தும் சோகாமேளர் பீமா நதியின் மறுகரைக்குத் தன் மனைவியுடன் குடிபெயர்ந்து வாழத் துவங்குகின்றார்.

அன்றிரவே பாண்டுரங்க மூர்த்தி சோகாமேளருக்கு அவரது குடிசையில் திருக்காட்சி தந்து அருள் புரிந்து அவரைத் தன்னுடைய ஆலயக் கருவறைக்கு அழைத்துச் சென்றுத் திருவுருவம் மறைகின்றார். பண்டரிநாதரின் விக்கிரகத் திருமேனியையும் தரிசிக்கப் பெறும் சோகாமேளர் கண்ணீர் பெருக்கி அகம் குழைந்து 'கருணைக் கடலே! பண்டரிநாதா! எளியேனின் பொருட்டு இத்தனை கருணையா பிரபு?!' என்று அன்றைய இரவுப் பொழுது முழுவதுமே கருவறையில் ஏகாந்தமாய் ஆடிப் பாடித் தொழுகின்றார். 

அது மட்டுமா! ஒரு சமயம் சோகாமேளரும் அவரின் திருத்துணைவியாரும் ஏகாதேசியன்று நல்விரதமிருந்து, இரவு முழுவதும் கண் விழித்துப் பாண்டுரங்கப் பெருமானை வழிபடுகின்றனர். மறுநாள் துவாதசி, சோகாமேளரின் மனைவியார் விரத நிறைவிற்கான பாரணை உணவினைத் தயாரிக்கச் செல்கின்றார், அச்சமயம் வாயிலில் கோடி சூரியப் பிரகாசராய்ப் பண்டரிநாதர் தோன்றி 'அன்பனே! நாம் இங்கு துவாதசிப் பாரணைக்காக எழுந்தருளி வந்தோம்' என்று அருள் புரிந்து அப்பெருமக்களின் உணவினை உண்டு 'உங்கள் சுவையான உணவினால் அகமிக மகிழ்ந்தோம், இனி ஒவ்வொரு துவாதசிக்கும் உங்கள் இல்லத்தில் நேரில் எழுந்தருளிப் பாரணை உணவினை ஏற்போம்' என்றொரு அமுத மொழி பகர்கின்றார்.     

மேலும் பல்வேறு திருவிளையாடல்களின் மூலம் சோகாமேளரின் மகத்துவத்தினை உணரப் பெறும் அப்பகுதி அரசன் சோகாமேளரைப் பூரண கும்ப மரியாதைகளுடன் திருக்கோயிலுக்கு அழைத்து வரச் செய்துத் திருவடி தொழுது நல்முறையில் பண்டரிநாதரின் தரிசனமும் செய்வித்து மகிழ்கின்றான் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!!

பக்த நாமதேவர் (பாண்டுரங்கப் பெருமான் அமுதூட்டிய அற்புத வரலாறு):

ஸ்ரீகிருஷ்ணாவதாரக் காலத்தில் கண்ணனிடத்து அதீத பக்தி பூண்டிருந்த அடியவர் உத்தவர், கண்ணன் தன் அவதார நோக்கம் நிறைவுற்று ஸ்ரீவைகுந்தத்திற்கு எழுந்தருளும் வேளையில் உத்தவருக்கு உபதேசித்த பகுதி ஸ்ரீமத் பாகவதத்தில் உத்தவ கீதை என்று போற்றப் பெறுகின்றது. ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகத் திருமேனியை வாயு தேவனிடமும்; தேவ குரு பிரஹஸ்பதியிடமும் அளித்தவர் உத்தவர். அத்தகைய புண்ணிய சீலரின் கலியுக அவதாரமாய், 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பண்டரிபுரத்தில் தோன்றிய அருளாளர் ஸ்ரீநாமதேவர். 

சைவ உலகில் 11ஆம் சைவத் திருமுறை வரையிலும் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாருக்கு அனுதினமும் அமுது படைத்த நிகழ்வு போலவே, சிறு பிராயத்தில் நாமதேவர் சமர்ப்பிக்கும் திருவமுதினைப் பாண்டுரங்கப் பெருமான் நேரிலேயே தோன்றி உட்கொண்டு மகிழ்வாராம், அது மட்டுமல்ல தன் திருக்கரங்களால் நாமதேவருக்கு ஊட்டியும் விடுவாராம், எத்தகைய பாக்கியம்!!

சைவ சமயத்தில் அருளாளர்கள் பலர் இருப்பினும் திருஞானசம்பந்தர்; திருநாவுக்கரசர்; சுந்தரர்; மணிவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் மட்டுமே குருநாதர்களாகத் திகழ்வது போலவே, பாண்டுரங்க வழிபாட்டு மரபில் ஸ்ரீநாமதேவர் குருநாதர்களுள் ஒருவராகப் போற்றப் பெறுகின்றார்.

பக்த ஜனாபாய் (பக்தையின் கீர்த்தனைகளைப் பாண்டுரங்கனே எழுதிய அற்புத வரலாறு):

துவாபர யுகத்தின் கிருஷ்ணாவதாரக் கால கட்டத்தில், கம்சனை வதம் புரிய கண்ணன் மதுராபுரி நகருக்கு வருகை புரிகையில், கூன் விழுந்த நங்கையொருத்தி கண்ணனின் திருமேனியில் பூசிக்கொள்ள தன்னிடமிருந்த அரைத்த சந்தனம் முழுவதையும் மனமுவந்து அளிக்கின்றாள், அதனால் திருவுள்ளம் மகிழும் கண்ணன் அவளின் கூனை நீக்கி அருள் புரிகின்றான். கூன் நீங்கப் பெற்று மகிழ்ந்த அக்காரிகையின் கலியுக அவதாரமாய் 14ஆம் நூற்றாண்டில் தோன்றும் ஞானச் செல்வியே ஸ்ரீஜனாபாய்.

சிறு பிராயம் முதலே பெற்றோர்களுடன் தங்காமல் நாமதேவர் எனும் மகானின் இல்லத்தில்  வளர்ந்து வருகின்றாள் ஜனா. பாண்டுரங்கப் பெருமானிடம் அதீத பக்தியும் ஈடுபாடும் பூண்டிருந்த ஜனாவுக்கு பண்டைய தவப் பயனால் இளமையிலேயே மிக இனிமையாய்க் கீர்த்தனைகளைப் பாடும் ஆற்றலும்கைவரப் பெறுகின்றது. நாமதேவருக்கு இயன்ற திருத்தொண்டுகள் புரிவது மற்றும் அவர்தம் துணைவியாருக்கு இல்லத்தில் பல்வேறு பணிகள் செய்துதவுவது என்று ஜனாபாய் இருந்து வருகின்றாள்; எப்பணியினை மேற்கொண்டிருந்தாலும் ஜனாவின் உள்ளம் பாண்டுரங்க ஸ்மரணையிலேயே லயித்திருக்கும். 
ஒரு சமயம் நாமதேவரின் துணைவியார் பெரும் அளவுள்ள கோதுமையை அரைக்கும் பொறுப்பினை ஜனாவிடம் அளிக்கின்றார், அச்சமயத்தில் சிறுவனொருவனின் வடிவில் அங்கு தோன்றும் பண்டரிநாதர் 'ஜனா! என் பெயர் விட்டலன், உன்னை எனக்கு நன்கு தெரியும். நீ எனக்காக பாண்டுரங்கனின் கீர்த்தனைகளைப் பாடு, நான் இந்த திருகுக் கல்லைச் சுற்றி உதவுகின்றேன்' என்று அருள் புரிகின்றார். ஜனாவும் மிக மகிழ்ந்துப் பரந்தாமனின் தசாவதார வைபவங்களைக் கீர்தனைகளாகப் பாட, மெய்யடியார்க்கு எளியரான பாண்டுரங்க மூர்த்தியும் அதனைக் கேட்டு மகிழ்ந்தவாறே அவளுக்கு மாவரைத்துத் தருகின்றார். 
அச்சமயம் அங்கு வரும் நாமதேவர் தம் இல்லத்திற்கு எழுந்தருளி இருப்பது பண்டரிபுர இறைவனே என்று உணர்ந்து அச்சிறுவனின் திருவடிகளில் வீழ்ந்துப் பணிகின்றார். பிறிதொரு சமயம் ஞானேஸ்வரர் எனும் மகான் பாண்டுரங்கனைத் தரிசிக்க ஆலயத்திற்குச் செல்லுகையில், கருவறையில் பண்டரிநாதர் ஜனாபாயின் கிருதிகளை ஓலைச்சுவடிகளில் எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பதைக் கண்டுப் பெரிதும் வியந்து அதனை அங்குள்ளோர் யாவருக்கும் வெளிப்படுத்துகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே). 

பக்த நரஹரி (வீர சைவர் பாண்டுரங்கனின் கருவறையில் தரிசித்த அற்புத நிகழ்வு):

14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பண்டரிபுரத்தில், வீர சைவ மரபில் தோன்றிய அருளாளர் நரஹரி. அண்டர் நாயகனான சிவபெருமானை முப்போதும் போற்றித் துதித்து மகிழ்வார்; பொற்கொல்லராகப் பணிபுரிந்து வரும் இவர் எந்நேரமும் சித்தத்தை சிவமூர்த்தியிடம் வைத்துத் திருஐந்தெழுத்து மந்திரத்தைக் காதலுடன் ஓதி வரும் தன்மையினால் பக்திப் பயிர் மெதுமெதுவே முதிர்ந்து வருகின்றது. மற்றொரு புறம் பாண்டுரங்கப் பெருமானின் திருநாமத்தினைக் கேட்டாலே பதறுவார், பண்டரிபுர ஆலய திசையில் தலை வைத்தும் படுக்க மாட்டார்; ஆலய கோபுரத்தினைத் தரிசிக்கவே கூடாது என்று உறுதி பூண்டிருந்தார், பாண்டுரங்கனுக்கு உற்சவக் கொடியேற்றும் காலங்களில் வெளியூருக்குச் சென்று தங்கி விடுவார்.

ஒரே தெய்வத்தை முழு ஈடுபாட்டுடன் வழிபட்டு அந்நெறியிலேயே உறுதி மாறாது நிற்பதென்பது நம் இந்து தர்மத்தில் பரிபூரணமாய் அங்கீகரிக்கப் பெற்றுள்ள மரபாகும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் இத்தகைய உத்தம நெறியில் நிலைநின்று தான் முத்திப் பேறு பெற்று வந்துள்ளனர். எனினும் ஏக தெய்வ வழிபாட்டு முறையில் இந்து தர்மத்தின் பிற தெய்வ வடிவங்களைத் துவேஷிக்காமல் சரியான புரிதலுடன் பயணிக்க வேண்டியது அவசியமாகின்றது. இல்லையெனில் நம் வழிபடு தெய்வத்தின் மீதுள்ள பக்தி மெதுமெதுவே குறைந்துப் பிற தெய்வங்களிடத்து உள்ள கோபம் மட்டுமே பிரதானமாகி நம்மை பக்தியின் கீழ்நிலைக்கு சர்வ நிச்சயமாய் இட்டுச் சென்று விடும். 
முதிர்ந்த பக்தியுள்ள அடியவர் பெருமக்கள் இவ்விதம் தவறான வழியில் பயணிக்கத் துவங்கும் பொழுது இறைவன் தனது திருவிளையாடல்களின் மூலம் அவர்களை நன்னெறிப்படுத்தி வருவது கண்கூடு. ஒரு சமயம் பாண்டுரங்க மூர்த்திக்கு வைரங்கள் பதிக்கப்பட்ட பொன் அரைஞான் செய்து தருமாறு வணிகரொருவர் வேண்டுகின்றார். நரஹரிக்கோ தூக்கி வாரிப் போடுகின்றது, எனினும் 'சரி! செய்து தருகின்றேன், ஆனால் நீங்களே சென்று அளவு எடுத்து வர வேண்டும், நான் வருவதற்கில்லை' என்ற நிபந்தனையுடன் உடன்படுகின்றார். 
வணிகர் பண்டரிநாதரின் திருஇடை அளவினை எடுத்து வர, நரஹரியும் திருஆபரணத்தை நேர்த்தியாகச் செய்து முடிக்கின்றார். இருப்பினும் வணிகர் அதனை ஆலயத்திலுள்ள மூர்த்திக்கு அணிவிக்க முயல்கையில் சுற்றளவு சிறிது குறைந்து காணப்படுகின்றது, நரஹரிக்கோ வியப்பு! மீண்டும் சரிசெய்து கொடுத்து அனுப்புகின்றார், இம்முறை சுற்றளவு சிறிது அதிகமாகத் தோன்றுகின்றது. இறுதியில் வணிகர் மற்றும் ஊர்மக்களின் நிர்பந்தத்தால் கண்களைக் கட்டிக் கொண்டு நரஹரியே அளவெடுக்க ஆலயக் கருவறைக்குள் நுழைகின்றார். 

மெதுவே விக்கிரகத் திருமேனியைத் தடவிப் பார்க்கையில் இவருக்குத் தட்டுப்படுவதோ ஆலமுண்ட அண்ணலின் மான்; மழு மற்றும் ருத்ராக்ஷ மாலைகளே, பட்டு வஸ்திரங்களுக்குப் பதிலாக புலித்தோலையே உணர்கின்றார்.  அதிர்ந்து கண்கட்டினை நீக்கிப் பார்த்தால் பாண்டுரங்கப் பெருமான் ஒப்புவமையில்லா மோகனப் புன்னகையுடன் திருக்காட்சி தந்தவண்ணம் நிற்கின்றார். பதறி மீண்டும் கண்களைக் கட்டித் துழாவினால் அகக் கண்களில் முக்கண் முதல்வரின் திருச்சின்னங்களே தென்படுகின்றது. 

நரஹரிக்கு சித்தம் தெளிகின்றது; சாஷ்டாங்கமாக பாண்டுரங்கப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்துக் கதறுகின்றார், பிழை பொறுக்குமாறு வேண்டித் தொழுகின்றார், கருணைப் பெருவெள்ளமான பண்டரிநாதரும் நரஹரிக்கு அசரீரியாய் ஆசி கூறி அருள் புரிகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!

பக்த சக்குபாய்

14ஆம் நூற்றாண்டில், பண்டரிபுரத்திற்கு அருகிலுள்ள சிற்றூரொன்றில் தோன்றிய ஞானச் செல்வி சக்குபாய். பண்டைய தவப் பயனால், பால்ய பருவத்திலேயே பாண்டுரங்க மூர்த்தி குருவடிவில் தோன்றி சக்குவிற்கு ஞானஉபதேசம் புரிந்து ஆட்கொள்கின்றார். பின்னாளில், மங்கைப்பருவம் எய்தும் சக்குவிற்கு, பெற்றோர் மற்றும் சுற்றத்தாரின் தொடர் நிர்பந்தத்தால் திருமண நிகழ்வும் நடந்தேறுகின்றது. எனினும் மண வாழ்க்கையில் ஒருசிறிதும் நாட்டமின்றி எந்நேரமும் பாண்டுரங்க தியானத்திலேயே இருந்து வரும் சக்குவின் மீது கணவனுக்கும், அவன் பெற்றோருக்கும் பெரும் வருத்தத்துடன் கோபமும் இருந்து வருகின்றது. 

ஒரு சமயம் அவர்கள் இல்லத்தின் வழியே பரம குருநாதர்களான நாமதேவர்; கபீர்தாஸ்; இராமதாசர் ஆகியோர் பக்தர்கள் கூட்டம் புடைசூழ பண்டரிபுர தலம் நோக்கிச் செல்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து கொண்டுத் தானும் பண்டரிபுரம் செல்ல வேண்டுமென்ற பேராவல் எழுகின்றது சக்குவிற்கு, எவ்வளவு கெஞ்சியும் கணவனிடமிருந்தும், மாமியார்; மாமனாரிடமிருந்தும் அனுமதி கிடைக்கவில்லை. மேலும் மேலும் அழுதபடி நிர்பந்திக்கும் சக்குவை அவர்கள் அறையொன்றினுள் அடைத்துக் கட்டியும் விடுகின்றனர். சக்கு கதியற்றுக் கதறுகின்றாள் 'பாண்டுரங்கா! கருணைக் கடலே! அரியபெரிய குருநாதர்களோடும், உன் புகழ் பாடும் அடியவர்களோடும் சேர்ந்து உன்னைத் தரிசிக்கும் ஆனந்த அனுபவம் அடியவளுக்கு வாய்க்கவில்லையே, இனியும் இத்தகைய பேறு என்று கிட்டுமோ? இந்த அபலையை காப்பது நின்கடன்' என்று அழுது தொழுகின்றாள்.

அந்த அறையில் பேரொளிப் பிரகாசமொன்று தோன்றுகின்றது, சக்குபாயின் வடிவில் அங்கு தோன்றும் பாண்டுரங்கப் பெருமான் 'குழந்தாய்! அன்று குருவாய் வந்து உனக்கு உபதேசித்த நானே இப்பொழுது உன்னுருவில் வந்துள்ளேன், உனக்கு பதிலாகக் என்னையிங்குக் கட்டி விட்டு உன் விருப்பம் போல் பண்டரிபுர ஷேத்திரத்தினைத் தரிசித்து விரைவில் திரும்புவாய்' என்றருள் புரிந்து அவள் கட்டுகளை நீக்குகின்றார். பெரிதும் மகிழும் சக்கு பண்டரிநாதரையே தூணில் பிணைத்துக் கட்டிச் சிட்டாய்ப் பறந்து அடியவர் திருக்கூட்டத்தினருடன் சென்று சேர்ந்து கொள்கின்றாள் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!.

பக்த கோராகும்பர்

பண்டரிபுர ஷேத்திரத்தில் 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர் கோராகும்பர், பாண்டுரங்க மரபின் குருநாதர்களுள் ஒருவரான நாமதேவரின் சமகாலத்தவர். தொழில் முறையால் குயவர்; எப்பணி புரிந்திருந்தாலும் பண்டரிநாதருடைய நாம சங்கீர்த்தனத்திலேயே லயித்திருப்பார். ஒரு சமயம் களிமண்ணை இருகால்களினாலும் மிதித்து மிதித்துப் பதப்படுத்திக் கொண்டிருந்தார், உள்ளமும், வாக்கும் வழக்கம் போல் பாண்டுரங்க ஸ்மரனையிலேயே நிலைத்திருக்கின்றது. 

அவருடைய குழந்தை மெதுமெதுவே தவழ்ந்தவாறு வீட்டிற்கு வெளியில் வருகின்றது. மெல்ல தன் பிஞ்சுக் கரங்களையும் கால்களையும் களிமண் சேற்றில் வைக்கின்றது. கோரா எதையுமே கவனிக்கும் நிலையிலில்லை, தன்னிலை மறந்துக் கருவி கரணங்கள் அனைத்தினாலும் தன்னையே சரணாகப் பற்றி நிற்கும் அடியவரின் குழந்தையைப் பண்டரிநாதர் வாரியெடுத்து ருக்மிணி தேவியிடம் அளிக்கின்றார். மாயத் தோற்றமுடைய குழந்தையொன்றினை அவ்விடத்தே தவழச் செய்கின்றார்.
இவை எதையுமே உணராத கோரா அக்குழவியை மிதித்து மெல்ல மெல்ல மண்ணுக்குள் தள்ளி விடுகின்றார், குழந்தையைத் தேடி வெளியே ஓடி வரும் கோராவின் மனைவி இதனைக் கண்டு ஐயோ என்று கதறியவாறு மயங்கி விடுகின்றார். தன்னிலை உணர்ந்து மனைவியின் மூலம் விவரமறியும் கோரா கண்ணீர் பெருக்கிக் கதறுகின்றார், அவரது மனைவியோ ஆற்றாமையினால் 'இப்படி உங்கள் கண்மூடித்தனமான பக்தியினால் நம் தவச் செல்வனைக் கொன்று விட்டீர்களே, அப்படி என்ன ஊரிலில்லாத பக்தி, இது உங்கள் பாண்டுரங்கனுக்கே பொறுக்காது' என்று கடுமையாய் நிந்திக்கத் துவங்குகின்றார்.  

கோரா வெகுண்டு 'அடிப் பாதகி! என் பாண்டுரங்க பக்தியின் அருமை புரியாது இகழத் துணிந்தாயே! உன்னை என்ன செய்கிறேன் பார்' என்று அடிக்கக் கையை ஒங்க, 'உங்கள் பாண்டுரங்கன் மீது ஆணை! எம்மைத் தீண்டாதீர்' என்று கோபத்துடன் உரைக்கின்றார் மனைவியார். கோராவின் வரலாற்றினைச் சைவ உலகில் போற்றப் பெறும் திருநீலகண்ட நாயனாரின் அவதார நிகழ்வுகளோடு சில கோணங்களில் ஒப்பு நோக்கலாம். இரு அருளாளர்களும் குயவர்களே, இருவரின் மனைவியரும் வெவ்வேறு காரணங்களுக்காக இறைவன் மீது ஆணையிட்டு 'எம்மைத் தீண்டாதீர்' என்று கூறுவர்.  
பின்பொரு சமயம் தற்செயலாக மனைவியின் கரங்கள் கோராவின் மீது பட்டுவிட, பாண்டுரங்கன் மீதிருந்த சத்தியத்தை மீறிவிட்டோமே என்று பதறித் தன் இருகரங்களையும் துண்டித்துக் கொள்கின்றார். பாண்டுரங்கப் பெருமான் கோராவின் சகோதர் உருவில் அங்கு எழுந்தருளி வந்து அவர்களுடன் சிறிது காலம் தங்கியிருந்துக் கோராவிற்குப் பல்வேறு பணிவிடைகள் புரிந்து வருகின்றார். பண்டரிபுரத்தில் பிரமோத்சவ காலமும் எய்துகின்றது. அடியவர்களோடு ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நாமதேவர் பாண்டுரங்கன் கருவறையிலுள்ள விக்கிரகத் திருமேனியை விட்டு நீங்கிச் சென்று கோராவிற்குப் பணி செய்து வருவதைத் தம்முடைய ஞான சக்தியினால் உணர்ந்து நெகிழ்கின்றார்.  
கண்ணீர் பெருக்கி 'ஏ பிரபோ! தம்முடைய லீலைகளை என்னென்று போற்றுவேன்? உற்சவ காலத்திற்காவது தாம் ஆலயத்துள் எழுந்தருளி வரக்கூடாதா?' என்று விண்ணப்பிக்கின்றார். பாண்டுரங்கனும் கோரா மற்றும் அவரின் மனைவியாருடன் ஆலயத்திற்குப் புறப்பட்டுச் சென்று, நாமதேவரிடம் கோராவை அறிமுகப்படுத்தி வைத்துப் பின் திருவுருவம் மறைகின்றார், பண்டரிநாதரின் திருவருளால் கோராவிற்கு மீண்டும் தன் குழந்தையும் கிடைக்கின்றது (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே).

பக்த ஏகநாதர் (பாண்டுரங்கனைப் பணியாளாகக் கொண்டிருந்த பரமஞானி):

16ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர் ஏகநாதர், இளம் பிராயத்திலேயே குருவருளால் இவருக்குத் திருக்காட்சி தரும் தத்தாத்ரேயர் 'ஏகநாதா! வால்மீகி இராமாயணத்தையும், வியாச பாகவதத்தையும் மராட்டிய மொழியில் இயற்றி நிலைத்த புகழைப் பெறுவாய்' என்று இவரின் அவதார நோக்கத்தினை உணர்த்தி அருள் புரிகின்றார். அதன் வழி நின்று இவ்விரு காவியங்களையும் மகாராஷ்ட்ர மொழியில் இயற்றிப் பண்டரிபுர ஆலயத்தில் யாவரும் வியக்கும் வகையில் அரங்கேற்றம்  புரிகின்றார். 

இவருடைய பாடல்களால் பெரிதும் திருவுள்ளம் மகிழும் பண்டரிநாதர் அதனை அருகிலிருந்து எந்நேரமும் கேட்டு அனுபவிக்க, 'கண்டியா கிருஷ்ணன்' எனும் சிறுவனின் வடிவில் ஏகநாதரிடம் வலிய சென்று ஊதியமின்றிப் பணிபுரிவதாகக் கூறி அவருடனேயே தங்கி வருகின்றார். அனுதினமும் ஏகநாதரின் பூஜைக்குத் திருமஞ்சன நீர் கொண்டு வருவார்; பூப்பறித்து வைப்பார்; வாயிலை மெழுகிக் கோலமிடுவார்; ஏகநாதரின் மனைவியார் தயாரிக்கும் பிரசாத உணவிற்கு அடுப்படியில் உதவிகள் பல புரிவார்; உபன்யாச சமயங்களில் ஏகநாதரின் அற்புத அற்புதமான பாடல்களைக் கேட்டு ரசித்தவாறே விசிறி வீசுவார். இவ்விதமாய்ப் பாண்டுரங்கன் சேவை செய்தது ஓரிரு மாதங்களோ வருடங்களோ அல்ல, முழுதாக 12 வருடங்கள்.

பண்டரிநாதர் விக்கிரகத் திருமேனியை விட்டு நீங்கியிருந்ததால் ஆலயத்தில் உற்சவங்கள் சிறப்புடன் நடைபெறுவதில்லை, இதன் காரணம் புரியாது மிக வருந்திப் பலகாலம் தவமிருந்த அடியவரொருவரின் முன்பு ருக்மிணிப் பிராட்டியார் தோன்றி 'பக்தனே! எம்பெருமான் ஏகநாதரின் திருப்பாடல்களில் மயங்கி அவருடைய இல்லத்திலேயே எழுந்தருளி இருக்கின்றார், நீ சென்று என் நாயகர் மீண்டும் ஆலயத்தில் கோயில் கொள்வதற்கான முயற்சியினை மேற்கொள்வாய்' என்றருள் புரிகின்றார். அந்த அடியவர் மூலம் விவரமறியும் ஏகநாதர் பாண்டுரங்கனின் கருணையையும், அடியவர்க்கு எளியவராயுள்ள தன்மையினையும் எண்ணி எண்ணிக் கண்ணீர் பெருக்கிக் கதறுகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!. 

பக்த ஞானேஸ்வரர்:

பாண்டுரங்க வழிபாட்டு மரபின் தனிப்பெரும் குருநாதராக போற்றப் பெறுபவர் ஞானேஸ்வரர். மிக இளம் வயதிலேயே ஞான சூரியனாய் பிரகாசித்த அருளாளர். எப்படி 3 வயதேயான திருஞானசம்பந்தரை முதன்மை குருநாதராக அவர் காலத்தில் வாழ்ந்த பிற நாயன்மார்களும் மற்றோரும் போற்றிப் பணிந்தனரோ அது போன்றே ஞானேஸ்வரரின் சமகாலத்தில் வாழ்ந்த நாமதேவர்; நரஹரி; கோராகும்பர்; சோகாமேளர்; ஜனாபாய் மற்றும் எண்ணிறந்த ஞானிகள் அவரைத் தலைமைப் பீடத்தில் வைத்துப் பெரிதும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். 

இவரின் அவதாரத் தலம் பூனேவிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புராதனமான சிவக்ஷேத்திரமான ஆலந்தி, இங்கு சிவமூர்த்தி சித்தேஸ்வரர் எனும் அற்புதத் திருநாமம் தாங்கி எழுந்தருளி இருக்கின்றார். 21ஆம் வயதில் இவர் சமகாலத்து அருளாளர்கள் யாவரும் பார்த்திருக்க, பாண்டுரங்கப் பெருமானே சித்தேஸ்வர சிவாலய வளாகத்தின் அடியிலுள்ள ஒரு சிறு குகையில் இவரை மகாசமாதி கொள்ள வைத்து அருள் புரிந்துள்ளார்.

பக்த மீரா:

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரத்தில், 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1498), கிருஷ்ண பக்தியே ஒரு வடிவு தாங்கி வந்தது போல் ராஜபுத்ர அரச குலத்தில் அவதரித்த அருளாளர் பக்த மீரா. பிள்ளைப் பருவத்திலேயே, பாகவத புராணம்; மாபாரத காவியம் என்று கிருஷ்ண லீலைகளைப் புராணப் பிரவசனமாய்க் கேட்டுக் கேட்டு கண்ணனின் மீது இயல்பாகவே பிரேம பக்தி ஊற்றெடுத்துப் பிரவகிக்கின்றது. சாது ஒருவரிடமிருந்து கிடைத்த கிருஷ்ண விக்கிரகத் திருமேனிக்கு 'கிரிதாரி' எனும் நாமம் சூட்டி சதா சர்வ காலமும் அதற்கு பூஜை செய்வதும்; நாம சங்கீர்த்தனத்தால் போற்றுவதுமாய் மெதுமெதுவே கிருஷ்ண பக்தியில் முதிர்ந்து பக்தி மயமாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றாள் மீரா.

கண்ணனே கனவில் தோன்றிக் கட்டளையிட்ட காரணத்தால் சித்தூர் மன்னரான ராணா கும்பாவை மணம் புரிகின்றாள், அதன் பின்னரும் மீராவின் பக்தியில் எவ்வித மாற்றமுமில்லை. எந்நேரமும் அடியவர்கள் சூழ்ந்திருக்க அரண்மனையிலுள்ள ஆலயத்தில் நாம சங்கீர்த்தனம் புரிந்த வண்ணமிருப்பாள். ராணாவின் பிற மனைவியர் மற்றும் உறவினர் மீராவின் மீது வெறுப்பு கொண்டு அவளுக்குப் பல விதங்களிலும் தொல்லை கொடுத்த வண்ணமிருக்கின்றனர். விதி வசத்தால் ராணா போர் ஒன்றில் மடிய நேரிட அதன் பின்னர் பதவியேற்கும் ராணாவின் சகோதரரும் மற்றோரும் மீராவைப் பலவிதங்களில் கொல்ல முயன்றும் அவை ஒவ்வொன்றிலும் தோல்வியையே தழுவுகின்றனர். 

பரிபூரணச் சரணாகத நிலையிலிருந்த மீரா எவரொருவரையும் பகைத்ததில்லை, எந்நேரமும் கண்ணனின் புகழையே உருக்கத்துடன் இசைத்துப் பாடிய வண்ணமிருப்பாள். கல்லையும் கரைவிக்கும் மீராவின் இசை வைபவம் நடந்தேறும் இடங்களில் கண்ணனின் பரிபூரணச் சானித்யம் நிறைந்திருக்கும், மக்கள் அனைவரும் மெய்மறந்து கிருஷ்ண அனுபவத்தில் லயித்து அதனைக் கேட்டிருப்பர். பிருந்தாவனத்தில் பலகாலம் தங்கியிருந்து கிருஷ்ண பக்தியைத் தழைக்கச் செய்துப் பின் துவாரகாபுரி ஆலயத்தில், யாவரும் காணுமாறு கருவறைக்குள் சென்று மூல மூர்த்தியோடு இரண்டறக் கலந்துப் பிறவாப் பெருவாழ்வு பெறுகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!.

துக்காராம் மஹராஜ் (ஒரு அறிமுகப் பதிவு):

கிருஷ்ணாவதார காலத்து அடியவரான உத்தவர் 13ஆம் நூற்றாண்டில் நாமதேவராக அவதரித்துப் பின் பண்டரிநாதரின் திருவருளால் நாமதேவரே மீண்டும் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில், நாம சங்கீர்த்தத்தின் மகிமையினை இப்புவிக்கு விளக்கமாக எடுத்துரைக்க 'துக்காராம்' எனும் திருநாமத்துடன் அவதரிக்கின்றார்.  இவரின் அவதாரத் தலம் பூனேவிலிருந்து 28 கி.மீ தொலைவிலுள்ள 'தேஹூ (Dehu)' எனும் சிற்றூராகும். இவர் வாழ்ந்த இல்லம்; இவர் பூஜை செய்த பாண்டுரங்கனின் விக்கிரகத் திருமேனி; இவருக்குப் பண்டரிநாதர் முதன்முதலில் திருக்காட்சி தந்து ஆட்கொண்ட பாண்டாரா மலை ஆகியவற்றை இன்றும் தேஹூவில் தரிசித்து மகிழலாம்.

துக்காராம் (உடலோடு வைகுந்தம் சென்ற குருநாதர்):

சுந்தர மூர்த்தி நாயனார், கேரளத்திலுள்ள திருஅஞ்சைக்களத்திலிருந்து, சிவபெருமான் அனுப்புவித்த வெள்ளை யானையில் ஆரோகணித்து உடலோடு திருக்கயிலைக்குச் சென்றது போலவே, மகாராஷ்ட்ர மாநிலத்தில், பூனேவிற்கு அருகிலுள்ள தேஹூ எனும் தலத்தில், இந்திராணி நதிக்கரையிலிருந்து, பாண்டுரங்கன் அனுப்புவித்த கருட விமானத்தில் உடலோடு ஸ்ரீவைகுந்தத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் துக்காராம் மஹராஜ்.

துக்காராம் (வைகுந்தத்திலிருந்து கடிதம் எழுதியனுப்பிய மகான்):

சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை செல்லும் பொழுது பாடிய தேவாரத் திருப்பதிகத்தை வருண தேவனும், சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலையில் பாடிய திருக்கயிலாய ஞான உலாவை மகா சாஸ்தாவும் மண்ணுலகில் வெளிப்படச் செய்த நிகழ்வுகள் சைவ உலகில் பிரசித்தமானவை. அது போலவே துக்காராம் சுவாமிகளின் அவதார நிறைவு சமயத்திலும் ஒரு சுவையான நிகழ்வு நடந்தேறுகின்றது. 

சுவாமிகள் அனைவரும் காண கருட விமானத்தில் ஆரோகணித்து ஸ்ரீவைகுந்தம் சென்ற பின்னர், அவரின் ஊரான தேஹுவிலுள்ள மக்களும்; அடியவர்களும்; சீடர்களும் சுவாமிகளின் பிரிவுத் துயரைத் தாளவே முடியாமல் 3 தினங்கள் வரையிலும் உணவும் நீருமின்றி வருந்தியிருக்கின்றனர். சுவாமிகள் அவர்களைச் சமாதானப் படுத்தும் விதமாக, தான் ஸ்ரீவைகுந்தத்தில் புதிதாகப் பாடிய 12 அபங்கங்கள் அடங்கிய சுவடிளைத் தன்னுடைய மேல் வஸ்திரத்தில் சுற்றி அதனுடன் தன்னுடைய தாளத்தையும் வைத்து, 'ஸ்ரீவைகுந்தம் வந்து சேர்ந்து விட்டேன்' எனும் குறிப்பையும் எழுதி அந்த முடிப்பு அவர்களின் நடுவில் விழுமாறு செய்கின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!.

துக்காராம் எனும் திருநாமம்:

இப்புவி வாழ வந்துதித்த துக்காராம் சுவாமிகள் பூனேவிற்கு அருகிலுள்ள தேஹு எனும் சிற்றூரில் அவதரித்ததும், பாண்டுரங்க மூர்த்தியின் நாயகியான ருக்மிணிப் பிராட்டியார் ஒரு சுமங்கலி வடிவில் நேரில் எழுந்தருளி வந்து, பிள்ளையின் தாயாரிடமிருந்துக் குழந்தையைப் பெற்றுத் தன் திருமடியில் இட்டு, தாலாட்டு பாடிப் பின் 'துக்காராம்' எனும் பரம புண்ணியமான திருநாமத்தை வைத்து அருள் செய்ததாக சுவாமிகளின் அவதார நிகழ்வுகள் பறைசாற்றுகின்றது.