பக்த கோராகும்பர்

பண்டரிபுர ஷேத்திரத்தில் 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர் கோராகும்பர், பாண்டுரங்க மரபின் குருநாதர்களுள் ஒருவரான நாமதேவரின் சமகாலத்தவர். தொழில் முறையால் குயவர்; எப்பணி புரிந்திருந்தாலும் பண்டரிநாதருடைய நாம சங்கீர்த்தனத்திலேயே லயித்திருப்பார். ஒரு சமயம் களிமண்ணை இருகால்களினாலும் மிதித்து மிதித்துப் பதப்படுத்திக் கொண்டிருந்தார், உள்ளமும், வாக்கும் வழக்கம் போல் பாண்டுரங்க ஸ்மரனையிலேயே நிலைத்திருக்கின்றது. 

அவருடைய குழந்தை மெதுமெதுவே தவழ்ந்தவாறு வீட்டிற்கு வெளியில் வருகின்றது. மெல்ல தன் பிஞ்சுக் கரங்களையும் கால்களையும் களிமண் சேற்றில் வைக்கின்றது. கோரா எதையுமே கவனிக்கும் நிலையிலில்லை, தன்னிலை மறந்துக் கருவி கரணங்கள் அனைத்தினாலும் தன்னையே சரணாகப் பற்றி நிற்கும் அடியவரின் குழந்தையைப் பண்டரிநாதர் வாரியெடுத்து ருக்மிணி தேவியிடம் அளிக்கின்றார். மாயத் தோற்றமுடைய குழந்தையொன்றினை அவ்விடத்தே தவழச் செய்கின்றார்.
இவை எதையுமே உணராத கோரா அக்குழவியை மிதித்து மெல்ல மெல்ல மண்ணுக்குள் தள்ளி விடுகின்றார், குழந்தையைத் தேடி வெளியே ஓடி வரும் கோராவின் மனைவி இதனைக் கண்டு ஐயோ என்று கதறியவாறு மயங்கி விடுகின்றார். தன்னிலை உணர்ந்து மனைவியின் மூலம் விவரமறியும் கோரா கண்ணீர் பெருக்கிக் கதறுகின்றார், அவரது மனைவியோ ஆற்றாமையினால் 'இப்படி உங்கள் கண்மூடித்தனமான பக்தியினால் நம் தவச் செல்வனைக் கொன்று விட்டீர்களே, அப்படி என்ன ஊரிலில்லாத பக்தி, இது உங்கள் பாண்டுரங்கனுக்கே பொறுக்காது' என்று கடுமையாய் நிந்திக்கத் துவங்குகின்றார்.  

கோரா வெகுண்டு 'அடிப் பாதகி! என் பாண்டுரங்க பக்தியின் அருமை புரியாது இகழத் துணிந்தாயே! உன்னை என்ன செய்கிறேன் பார்' என்று அடிக்கக் கையை ஒங்க, 'உங்கள் பாண்டுரங்கன் மீது ஆணை! எம்மைத் தீண்டாதீர்' என்று கோபத்துடன் உரைக்கின்றார் மனைவியார். கோராவின் வரலாற்றினைச் சைவ உலகில் போற்றப் பெறும் திருநீலகண்ட நாயனாரின் அவதார நிகழ்வுகளோடு சில கோணங்களில் ஒப்பு நோக்கலாம். இரு அருளாளர்களும் குயவர்களே, இருவரின் மனைவியரும் வெவ்வேறு காரணங்களுக்காக இறைவன் மீது ஆணையிட்டு 'எம்மைத் தீண்டாதீர்' என்று கூறுவர்.  
பின்பொரு சமயம் தற்செயலாக மனைவியின் கரங்கள் கோராவின் மீது பட்டுவிட, பாண்டுரங்கன் மீதிருந்த சத்தியத்தை மீறிவிட்டோமே என்று பதறித் தன் இருகரங்களையும் துண்டித்துக் கொள்கின்றார். பாண்டுரங்கப் பெருமான் கோராவின் சகோதர் உருவில் அங்கு எழுந்தருளி வந்து அவர்களுடன் சிறிது காலம் தங்கியிருந்துக் கோராவிற்குப் பல்வேறு பணிவிடைகள் புரிந்து வருகின்றார். பண்டரிபுரத்தில் பிரமோத்சவ காலமும் எய்துகின்றது. அடியவர்களோடு ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நாமதேவர் பாண்டுரங்கன் கருவறையிலுள்ள விக்கிரகத் திருமேனியை விட்டு நீங்கிச் சென்று கோராவிற்குப் பணி செய்து வருவதைத் தம்முடைய ஞான சக்தியினால் உணர்ந்து நெகிழ்கின்றார்.  
கண்ணீர் பெருக்கி 'ஏ பிரபோ! தம்முடைய லீலைகளை என்னென்று போற்றுவேன்? உற்சவ காலத்திற்காவது தாம் ஆலயத்துள் எழுந்தருளி வரக்கூடாதா?' என்று விண்ணப்பிக்கின்றார். பாண்டுரங்கனும் கோரா மற்றும் அவரின் மனைவியாருடன் ஆலயத்திற்குப் புறப்பட்டுச் சென்று, நாமதேவரிடம் கோராவை அறிமுகப்படுத்தி வைத்துப் பின் திருவுருவம் மறைகின்றார், பண்டரிநாதரின் திருவருளால் கோராவிற்கு மீண்டும் தன் குழந்தையும் கிடைக்கின்றது (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே).

1 comment:

  1. ஆஹா அற்புதமான ஹரி கதைகள் பொருத்தமான படங்கள்

    ReplyDelete