பக்த சூர்தாஸர் (கண்ணனின் சாபத்தால் அவதரித்த அடியவர்):

15ஆம் நூற்றாண்டின் இறுதியில், கிருஷ்ண ஜன்ம பூமியான மதுராபுரியில் தோன்றி 16ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் வாழ்ந்திருந்த அருளாளர் சூர்தாஸர். கண்பார்வையின்றி அவதரித்தும் பண்டைய தவப் பயனால் இனிமையான சாரீரமும், அற்புதக் கிருதிகளை இயற்றும் வல்லமையும் கைவரப் பெறுகின்றார். இவரின் கீர்த்தனைகளைக் கேட்போர் எவராயினும் கிருஷ்ண பக்தியில் அமிழ்ந்து விடுவர், கல்லையும் கரைக்கும் இவரது இசைக்கு விலங்குகள்; பறவைகள் யாவுமே கட்டுப்பட்டுத் தன்னிலை மறந்து நின்றிருக்கும், இவரின் தெய்வீக இசையால் பட்டமரங்கள் தளிர்த்துக் குலுங்கும். இவரின் கீர்த்தனைகள் அப்பகுதி வழக்கிலிருந்த ஹிந்தி மொழியில் அமைந்திருந்தன, கவி வானில் தன்னிகரற்ற சூரியனாக விளங்கினார் தாஸர்.  

அப்பகுதி அரசர் தாஸரைக் கௌரவிக்க அவரை அரசவைக்கு அழைப்பித்துப் பாடச் செய்கின்றார், இனிய இசையோடு கூடிய தாசரின் பாடல்கள் அவையினரைத் தெய்வீக அனுபவத்திற்கு இட்டுச் செல்கின்றது, அற்புத அற்புதமான கருத்துக்களையும்; இந்து தர்ம தத்துவங்களையும் தம்முடைய பாடல்களில் அமைத்துப் பாடுவார் தாஸர். அரசியாரும் தாஸருடைய இசை கேட்க விரும்பியதால் அவருடைய மாளிகைக்கும் தாஸரை அழைத்துச் செல்கின்றார் அரசர். கண்பார்வையற்ற நிலையிலும் அங்கிருந்த பணிப்பெண் ஒருவர் மட்டும் தாஸரின் கண்களுக்கு நன்றாகத் தெரிகின்றார், பெருவியப்புடன் 'கண்ணனின் நாயகியே, தேவி சத்யபாமா, தாம் இங்கிருப்பதன் காரணம் என்ன அன்னையே?' என்று உரத்த குரலில் கேட்கின்றார். 

இனி தாஸரின் அவதார ரகசியத்திற்குள் செல்வோம், அப்பொழுது துவாபர யுகத்தின் இறுதியில் நடந்தேறி வரும் கிருஷ்ணாவதாரக் கால கட்டம், ஒரு சமயம் தேவி சத்யபாமா கண்ணனின் அடியவரான அக்ரூரரிடம் 'நெடுநாட்களாக என் நாயகர் அடியவளின் மாளிகைக்கு வருகை புரியாததால் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றேன், இன்னும் ஒரு நாழிகைக்குள் சுவாமி இவ்விடம் வாராதிருந்தால் இன்னுயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று உறுதியுடன் உரைக்கின்றார். அக்ரூரரால் எங்கு தேடியும் கண்ணனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. கண்ணன் சர்வ வியாபி என்பதை ஒரு கணம் மறந்து, 'அன்னை தன் உயிரைப் போக்கிக் கொள்வாரே' எனும் பதற்றத்தில், தன் தவவலிமையால் கண்ணனைப் போன்றதொரு உருவெடுத்துத் தேவியிடம் சென்று சமாதானப்படுத்தி விரைவில் திரும்புவதாகக் கூறிச் செல்கின்றார். 

பின்னர் விவரமறியும் மாபாரதக் கண்ணனோ 'அக்ரூரா! கண்மூடித் தனமான இக்காரியத்தினைச் செய்ததால் பூவுலகில் குருடனாய்ப் பிறக்கக் கடவாய்' என்று சபித்துப் பின் தேவி சத்யபாமாவையும் எளிய குடும்பமொன்றில் பிறக்குமாறுச் சபிக்கின்றார். அக்ரூரரின் கலியுக அவதாரமே பக்த சூர்தாஸர், அன்னை சத்யபாமா தான் அங்கு அரசியாருக்குப் பணி புரிந்து கொண்டிருந்தார். அரசனும்; அரசியும் மற்றுள்ளோரும் வியப்புற்றுத் தாஸரைப் பார்த்துக் கொண்டிருக்க, கோகுலக் கண்ணன் கோடி சூர்ய பிரகாசமாய் அங்கு எழுந்தருளித் தாஸரையும்; தேவியையும் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொள்கின்றான், அனைவருக்கும் ஆசி கூறி மறைகின்றான் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!

No comments:

Post a Comment