நாரத மகரிஷியின் கலியுக அவதாரமாக 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய அருளாளர் புரந்தரதாசர், இயற்பெயர் ரகுநாதர், வட்டிக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு பணம்; பொருள் என்று உலகியலிலேயே லயித்திருந்த ரகுநாதரைப் பாண்டுரங்கன் தடுத்தாட்கொண்டு ஞான மார்க்கத்துக்கு மடை மாற்றி விடுகின்றார். இவருக்குப் புரந்தரதாசர் எனும் திருநாமம் அமைந்த சுவையான நிகழ்வினை இனிக் காண்போம்,
ஒரு சமயம் ரகுநாதர் தன் மனைவி லக்ஷ்மிபாயுடன் தலயாத்திரையாக ஏழுமலையானின் வாசஸ்தலமான திருப்பதி தலத்திற்குச் செல்கின்றார். அங்கு புரந்தரி எனும் பரம பாகவதையின் இல்லத்தில் தங்கியிருந்தவாறே வேங்கடேசப் பெருமானைப் பாமாலைகளால் போற்றி வருகின்றார். இந்நிலையில் அனுதினமும் நள்ளிரவு வேளையில் புரந்தரி நன்கு அலங்கரித்துக் கொண்டு, கால்களில் சலங்கையுடனும், கைகளில் வீணையுடனும் புறப்பட்டுச் செல்வதைக் காண்கின்றார். 'இந்த பெண்மணி எங்கு தான் செல்கின்றார்?' என்று அறிந்து கொள்ள ரகுநாதருக்குப் பெரும் ஆவல்.
ஒரு நாள் இரவு அது குறித்து நேரடியாக கேட்டும் விடுகின்றார், புரந்தரி சிறிது தயங்கி 'சுவாமி! தாங்கள் பாண்டுரங்கனின் பரிபூரணக் கடாட்சம் பெற்ற பரம பாகவதர் என்பதால் இந்த ரகசியத்தைக் கூறுகின்றேன். அனுதினமும் ஆலயத்தில் நடை சார்த்திய பின்னர் வேங்கடவனின் சன்னிதி வாயில் முன்பு சென்று வீணையை மீட்டுவேன், திருவருளால் கதவுகள் திறந்து கொள்ளும். ஸ்ரீநிவாசப் பெருமான் அடியவளின் மீதுள்ள அளப்பரிய கருணையால் நேரில் எழுந்தருளி வருவார், அடியவள் வீணையில் மீட்டும் இசைக்கேற்ப பதம் பிடித்துப் பரதமாடுவார். பின்னர் பெருமான் வீணையை மீட்டி இசைக்க அடியவள் ஆடுவேன். இத்திருத்தொண்டைப் பல காலமாகச் செய்து வருகின்றேன்' என்று கூறுகின்றாள்.
ரகுநாதர் 'இப்படியும் ஒரு பக்தியா!' என்று உளமுருகி 'அம்மா! தாம் அடியவனுக்கும் வேங்கடவனைத் தரிசனம் செய்விக்க வேண்டும்' என்று பணிவுடன் விண்ணப்பிக்கப் புரந்தரியும் சம்மதிக்கின்றாள். வீணையிசையால் வழக்கம் போல் திருக்கதவுகள் திறக்கின்றன, புரந்தரியுடன் உள்ளே செல்லும் ரகுநாதர் தான் மட்டும் தூணின் பின்னே மறைந்து கொள்கின்றார். திருமலை நாயகன் கோடி சூர்யப் பிரகாசத்துடன் தோன்றுகின்றார், ஏதுமறியாதவர் போலப் புன்முறுவலுடன் புரந்தரியின் இசைக்கேற்ப திருநடமிடுகின்றார். பின்னர் தன் முறை வரும் பொழுது பரந்தாமன் வேண்டுமென்றே அபஸ்வரமாகப் பாடத் துவங்க அதனைப் பொறுக்க மாட்டாது தூண் மறைவிலிருந்து வெளிப்பட்டு வருகின்றார் ரகுநாதர். திருமலை தெய்வத்தின் திருவடிகளைத் தொழுதேத்துகின்றார்.
வேங்கடவனும் திருவுள்ளம் கனிந்து 'ரகுநாதா! நீ புரந்தரியிடம் ஞான உபதேசம் பெற்றுப் புரந்தரதாசர் எனும் நாமத்துடன் நாம சங்கீர்தன வைபவத்தைப் புவியெங்கும் பிரகாசிக்கச் செய்து நம்மை வந்தடைவாய்' என்று ஆசி கூறி மறைகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே).
வேங்கடவனும் திருவுள்ளம் கனிந்து 'ரகுநாதா! நீ புரந்தரியிடம் ஞான உபதேசம் பெற்றுப் புரந்தரதாசர் எனும் நாமத்துடன் நாம சங்கீர்தன வைபவத்தைப் புவியெங்கும் பிரகாசிக்கச் செய்து நம்மை வந்தடைவாய்' என்று ஆசி கூறி மறைகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே).
No comments:
Post a Comment