பக்த புண்டரீகர் (பண்டரிபுர ஷேத்திரம் உருவான அற்புத வரலாறு):

மஹாராஷ்டர மாநிலத்தில் பீமா நதிக்கரைப் பகுதியில் தோன்றிய அருளாளர் புண்டரீகர். இளம் பிராயத்தில் கல்வி கேள்விகளில் அக்கறையின்றித் திரிகின்றார், தாய் தந்தையரின் சொல்லை ஒருசிறிதும் பொருட்படுத்தாது அவர்களை எந்நேரமும் நிந்தித்தும் வருகின்றார். திருமண வாழ்வினாலும் புண்டரீகரின் உள்ளத்தில் யாதொரு மாற்றமுமில்லை, இல்லறத்தில் இருந்த நிலையிலும், விலைமாதரின் இல்லமே கதியென்று உழல்கின்றார். 

ஒரு சமயம் புண்டரீகரின் பெற்றோர் காசி யாத்திரை மேற்கொள்கின்றனர், அவர்கள் சென்று சில நாட்களுக்குப் பின்னர் புண்டரீகருக்கும் காசி செல்லும் விருப்பம் தோன்ற மனைவியுடன் இருவேறு குதிரைகளில் புறப்படுகின்றார். சில நாட்கள் பயணத்திற்குப் பின் தொலைதூரத்தில் பெற்றோர்கள் சில யாத்ரீகர்களோடு நடந்து கொண்டிருப்பது தெரிய, அவர்கள் கண்களில் படாமல் செல்ல மாற்றுப் பாதை என்று கருதித் தவறான பாதையொன்றில் பயணித்துச் செல்கின்றார். 

அவ்வழியில், பண்டைய தவப் பயனால், பெற்றோரின் சேவையே பெரிதெனக் கொண்டிருந்த குக்குட முனிவரின் தரிசனம் புண்டரீகருக்குக் கண நேரம் கிட்டுகின்றது. அந்த தரிசனப் பயனால் மறுநாள் அதிகாலை அதே முனிவரின் ஆசிரம வாயிலில் கங்கா; யமுனா; சரஸ்வதி ஆகிய நதி தெய்வங்களைத் தரிசிக்கப் பெற்றுப் பணிகின்றார். புனித நீராடுவோர் தங்களிடம் விட்டுச் செல்லும் பாவங்களைக் குக்குட முனிவரின் தரிசனத்தால் போக்கிக் கொள்ள வந்திருந்த அம்மூன்று தேவியரின் வாயிலாக 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' எனும் வாக்கிய விளக்கத்தையும், பெற்றோர் சேவையினால் சிறப்புற்று விளங்கும் குக்குட முனிவரின் பெருமையையும் அறிந்து கொண்டு சித்தம் தெளிகின்றார்.   

இது நாள் வரையில் பெற்றோருக்குச் செய்து வந்த அபவாதத்தை எண்ணியெண்ணிப் பதைபதைக்கின்றார், விரைந்து சென்று காசியில் தாய்; தந்தையரைத் தரிசித்துத் திருவடிகளில் வீழ்ந்துப் பிழை பொறுக்குமாறு விண்ணப்பிக்கின்றார், மைந்தனின் மனமாற்றத்தினால் ஈன்றோர் பெரிதும் மகிழ்கின்றனர். அது முதல் எண்ணிறந்த ஆண்டுகள் தாய்; தந்தையரைக் கண்ணும் கருத்துமாய்ப் போற்றி அவர்கள் சேவையொன்றினையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு இல்லறம் பேணி வருகின்றார் புண்டரீகர். 

கோவர்த்தன கிரிதாரியான ஸ்ரீகிருஷ்ணன் புண்டரீகரின் பெற்றோர் சேவையினால் திருவுள்ளம் பெரிதும் மகிழ்ந்து அவருக்கு அருள் புரியும் திருநோக்குடன், தன் சுய உருவுடனேயே அவரின் இல்லம் நாடிச் சென்று 'புண்டரீகா' என்று அழைக்கின்றார். பெற்றோர் சேவையில் ஈடுபட்டிருந்த புண்டரீகர் வெளியில் எட்டிப் பார்க்கின்றார், அங்கு சிரசில் பொன் மகுடம்; திருநெற்றியில் கஸ்தூரி திலகம்; திருக்கழுத்தில் அணி செய்யும் முத்து மாலைகள்; திருமார்பில் கௌஸ்துப மணி; திருஇடையில் பீதாம்பரம்; மணிக்கட்டில் கங்கணம்; இரு திருக்கரங்களையும் திருஇடையில் வைத்திருக்கும் சர்வாலங்கார ஆனந்தத் திருக்கோலத்தில் கண்ணனைத் தரிசித்து மகிழ்கின்றார். 

'சுவாமி அந்த செங்கல் ஆசனத்தில் சிறிது எழுந்தருளி இருப்பீர், பெற்றோர் சேவையை முடித்துவிட்டு வருகின்றேன்' என்று உள்ளிருந்தவாறே குரல் கொடுக்கின்றார், கோகுலக் கண்ணனும் அங்கிருந்த செங்காலொன்றின் மீது பிறவிப் பிணிபோக்கும் தன் திருப்பாதங்களை ஊன்றிப் புண்டரீகருக்காகக் காத்திருக்கின்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்துத் திருவடிகளில் வீழ்ந்துப் பணியும் புண்டரீகரிடம் 'அன்பனே! பெற்றோர் சேவையின் மகத்துவத்தினை உன்னால் இவ்வையகம் உணரப் பெற்து, வேண்டும் வரங்களைக் கேட்பாய்' என்று அருள் புரிகின்றார். 

'சுவாமி, விட்டலன் எனும் திருநாமத்துடன், தாம் இதே திருக்கோலத்தில் இங்கு கோயில் கொள்ள வேண்டும், இங்கு ஓடும் பீமா நதி புனித கங்கைக்கு ஒப்பாகத் திகழ வேண்டும், அடியேனின் திருநாமத்தால் இத்தலம் புண்டரீகபுரம் என்று போற்றப் பெறுதல் வேண்டும்' என்று புண்டரீகர் பணிய 'அவ்வண்ணமே ஆகுக!' என்று திருவாய் மலர்ந்து அருள் புரிகின்றார், விட்டலன் எனும் அற்புதத் திருநாமம் பெற்றுள்ள பாண்டுரங்கப் பெருமான். பின்னர் காலவெள்ளத்தில் புண்டரீகபுரம் புண்டரீபுரம் என்று மாறிப் பின் தற்கால வழக்கில் பண்டரிபுரம் என்று அடியவர் பெருமக்களால் பெரிதும் போற்றப் பெற்று வருகின்றது.

No comments:

Post a Comment