பக்த சூர்தாஸர் (கண்ணனின் சாபத்தால் அவதரித்த அடியவர்):

15ஆம் நூற்றாண்டின் இறுதியில், கிருஷ்ண ஜன்ம பூமியான மதுராபுரியில் தோன்றி 16ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் வாழ்ந்திருந்த அருளாளர் சூர்தாஸர். கண்பார்வையின்றி அவதரித்தும் பண்டைய தவப் பயனால் இனிமையான சாரீரமும், அற்புதக் கிருதிகளை இயற்றும் வல்லமையும் கைவரப் பெறுகின்றார். இவரின் கீர்த்தனைகளைக் கேட்போர் எவராயினும் கிருஷ்ண பக்தியில் அமிழ்ந்து விடுவர், கல்லையும் கரைக்கும் இவரது இசைக்கு விலங்குகள்; பறவைகள் யாவுமே கட்டுப்பட்டுத் தன்னிலை மறந்து நின்றிருக்கும், இவரின் தெய்வீக இசையால் பட்டமரங்கள் தளிர்த்துக் குலுங்கும். இவரின் கீர்த்தனைகள் அப்பகுதி வழக்கிலிருந்த ஹிந்தி மொழியில் அமைந்திருந்தன, கவி வானில் தன்னிகரற்ற சூரியனாக விளங்கினார் தாஸர்.  

அப்பகுதி அரசர் தாஸரைக் கௌரவிக்க அவரை அரசவைக்கு அழைப்பித்துப் பாடச் செய்கின்றார், இனிய இசையோடு கூடிய தாசரின் பாடல்கள் அவையினரைத் தெய்வீக அனுபவத்திற்கு இட்டுச் செல்கின்றது, அற்புத அற்புதமான கருத்துக்களையும்; இந்து தர்ம தத்துவங்களையும் தம்முடைய பாடல்களில் அமைத்துப் பாடுவார் தாஸர். அரசியாரும் தாஸருடைய இசை கேட்க விரும்பியதால் அவருடைய மாளிகைக்கும் தாஸரை அழைத்துச் செல்கின்றார் அரசர். கண்பார்வையற்ற நிலையிலும் அங்கிருந்த பணிப்பெண் ஒருவர் மட்டும் தாஸரின் கண்களுக்கு நன்றாகத் தெரிகின்றார், பெருவியப்புடன் 'கண்ணனின் நாயகியே, தேவி சத்யபாமா, தாம் இங்கிருப்பதன் காரணம் என்ன அன்னையே?' என்று உரத்த குரலில் கேட்கின்றார். 

இனி தாஸரின் அவதார ரகசியத்திற்குள் செல்வோம், அப்பொழுது துவாபர யுகத்தின் இறுதியில் நடந்தேறி வரும் கிருஷ்ணாவதாரக் கால கட்டம், ஒரு சமயம் தேவி சத்யபாமா கண்ணனின் அடியவரான அக்ரூரரிடம் 'நெடுநாட்களாக என் நாயகர் அடியவளின் மாளிகைக்கு வருகை புரியாததால் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றேன், இன்னும் ஒரு நாழிகைக்குள் சுவாமி இவ்விடம் வாராதிருந்தால் இன்னுயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று உறுதியுடன் உரைக்கின்றார். அக்ரூரரால் எங்கு தேடியும் கண்ணனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. கண்ணன் சர்வ வியாபி என்பதை ஒரு கணம் மறந்து, 'அன்னை தன் உயிரைப் போக்கிக் கொள்வாரே' எனும் பதற்றத்தில், தன் தவவலிமையால் கண்ணனைப் போன்றதொரு உருவெடுத்துத் தேவியிடம் சென்று சமாதானப்படுத்தி விரைவில் திரும்புவதாகக் கூறிச் செல்கின்றார். 

பின்னர் விவரமறியும் மாபாரதக் கண்ணனோ 'அக்ரூரா! கண்மூடித் தனமான இக்காரியத்தினைச் செய்ததால் பூவுலகில் குருடனாய்ப் பிறக்கக் கடவாய்' என்று சபித்துப் பின் தேவி சத்யபாமாவையும் எளிய குடும்பமொன்றில் பிறக்குமாறுச் சபிக்கின்றார். அக்ரூரரின் கலியுக அவதாரமே பக்த சூர்தாஸர், அன்னை சத்யபாமா தான் அங்கு அரசியாருக்குப் பணி புரிந்து கொண்டிருந்தார். அரசனும்; அரசியும் மற்றுள்ளோரும் வியப்புற்றுத் தாஸரைப் பார்த்துக் கொண்டிருக்க, கோகுலக் கண்ணன் கோடி சூர்ய பிரகாசமாய் அங்கு எழுந்தருளித் தாஸரையும்; தேவியையும் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொள்கின்றான், அனைவருக்கும் ஆசி கூறி மறைகின்றான் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!

சூர்தாஸர்

15ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவதரித்து, 104 ஆண்டுகள் வாழ்ந்து, இனிமையான இசையோடு கூடிய தனது தெய்வீகப் பாடல்களால்  கிருஷ்ண பக்தியைப் பாரதமெங்கிலும் தழைத்தோங்கச் செய்த அருளாளர் சூர்தாஸர். இவர் அருளிய 1 லட்சம் ஹிந்தி மொழிக் கவிதைகளுள் நமக்கின்று கிடைத்திருப்பவையோ சுமார் 8000 பாடல்களே!!

சமர்த்த ராமதாசர் (ஒரு அறிமுகப் பதிவு)

17ஆம் நூற்றாண்டில் அவதரித்து 73 ஆண்டுகள் வாழ்ந்து இராம நாம வைபவத்தைப் பாரத பூமியெங்கிலும் தழைத்தோங்கச் செய்த புண்ணிய சீலர் சமர்த்த ராமதாசர். 13ஆம் வயதில் கடும் தவத்தினால் ஆஞ்சநேயப் பிரபுவின் திவ்ய தரிசனம் கிடைக்கப் பெறுகின்றார். பின் அஞ்சனை மைந்தனின் பரிந்துரையால் நாசிக் நகரிலுள்ள பஞ்சவடியில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அற்புத தரிசனமும், ஞான உபதேசமும் கிட்டுகின்றது. இதன் தொடர்ச்சியாய், நாசிக்கிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள 'தக்ளி' எனும் பகுதியில் தன்னை ஆட்கொண்ட அனுமனுக்கென்று ஆலயம் ஒன்றினைக் கட்டுவித்து மகிழ்கின்றார். பின்னர் இராம தூதனின் வழிகாட்டுதலின் பேரில், 12 வருட காலம் கடும் தவமிருந்து, மூன்றரை கோடி முறை ராம தாரக மந்திரத்தை ஜபித்து அதன் பலனாய்ச் சீதா; லக்ஷ்மண; பரத; சத்ருக்ன; அனுமன் சமேதராய் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைத் தரிசிக்கப் பெற்று மகிழ்கின்றார்.

வீர சிவாஜிக்குக் காவிக் கொடி அளித்த சமர்த்த ராமதாசர்:

வீர சிவாஜி மன்னர் ஒரு சமயம் வேட்டைக்குச் செல்லுகையில், அந்திப்பொழுதில், வனத்தின் நடுவே பேரொளிப் பிரகாசமொன்றினால் ஈர்க்கப்பட்டு அருகில் செல்கின்றார். அங்கு வன விலங்குகள் வீட்டுப் பிராணிகள் போல் அமைதியாகச் சூழ்ந்திருக்க, தியான நிலையிலிருக்கும் சமர்த்த ராமதாசரைத் தரிசிக்கின்றார், மகானின் தெய்வீகத் தோற்றத்தால் உள்ளம் உருகுகின்றது, அருகில் செல்ல அச்சமுற்றுத் தூரத்திலிருந்தே பணிந்து விட்டுச் செல்கின்றார். அன்று முதல் அனுதினமும் காலை; மாலை வேளைகளில், வனம் சென்று ராமதாசரைத் தொலைவிலிருந்தே தரிசித்து வரத் துவங்குகின்றார். எந்நேரமும் தாசரின் திருவடிகளையே நினைந்துருகி வரும் மன்னருக்கு என்றேனும் அம்மகானுடன் உரையாடும் பாக்கியம் கிட்டும் என்ற அதீத நம்பிக்கை. 

ஒரு சமயம் அவ்வாறு செல்கையில், இராம பக்தரான ஆஞ்சநேயப் பிரபு தாசருடன் உரையாடும் திருக்காட்சியைத் தொலைவிலிருந்துக் கணநேரம் தரிசிக்கப் பெறுகின்றார். அருகில் சென்று அடியற்ற மரம் போல தாசரின் பிறவிப் பிணி போக்கும் திருவடிகளில் வீழ்ந்து 'சுவாமி! அடியவன் மகாராஷ்டிர மன்னன், பலகாலமாய் தங்களை இவ்வனத்தில் தரிசித்துப் பணிந்து வருகின்றேன், தயவு கூர்ந்து மறுக்காது எளியவனுக்கு ஞான உபதேசம் செய்து அருள் புரிய வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார். தாசர் கண்ணீருடன் பணிந்திருக்கும் சிவாஜி மன்னரின் தூய பக்தியினால் அகம் மலர்ந்து மன்னருக்கு மந்திர உபதேசம் செய்து ஆசி கூறுகின்றார்.

தாசரின் அனுக்கிரகத்தால் மெய்ஞான உணர்வு பெறும் மன்னர் 'அடியவனுடைய உடல்;பொருள்;ஆவி மூன்றையும் தங்களுக்கே அர்ப்பணித்து விட்டேன், தாமே அடியவனின் இராஜ்யத்தை ஆண்டு அருள் செய்ய வேண்டும்' என்று வேண்டுகின்றார். தாசர் உள்ளம் கனிந்து 'மன்னா! உன்னுடைய ஆத்ம சமர்ப்பணத்தை ஏற்றோம், இரு மாற்றங்களைச் செய்வாய், உன்னுடைய கொடி காவிக்கொடியாக விளங்கட்டும், உன்னுடைய மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது 'ராம்; ராம்' என்று கூறும் வழக்கத்தினை மேற்கொள்ளட்டும்.  இவற்றைச் செய்தால் யாம் ஆண்டதற்குச் சமம், எமது பிரதிநிதியாக இருந்து நல்லாட்சி நடத்தி வருவாய்' என்று ஆசி கூறுகின்றார்.

சமர்த்த ராமதாசர் போதித்த ராஜ நீதி:

ஒப்புவமையற்ற குருநாதரான சமர்த்த ராமதாசர் 'தாசபோதம்; குருகீதை' எனும் இரு நூல்களை இயற்றி சிவாஜி மன்னரிடம் அளித்து 'மன்னவனே! இந்த இரண்டு நூல்களில் ராஜ தர்மத்தினை ஐயத்திற்கு இடமின்றி விளக்கியுள்ளேன். இதன் வழி நின்று நல்லாட்சி புரிவாயாக' என்று ஆசி கூறியுள்ளார். 

ஔரங்கசீப்பின் படைகளை விரட்டியடித்த சமர்த்த ராமதாசர்:

ஒரு சமயம் ராமதாசர் சீடரொருவருடன் வனப்பகுதி ஒன்றினைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியே ஔரங்கசீப்பின் படைத்தலைவன் தக்ஷிண பூமியான தென்திசை மீது போர்தொடுக்கப் பெரும் படைகளுடன் வருகின்றான். காவித் துறவியான ராமதாசரை ஆணவத்துடன் பார்க்கின்றான், தன்னுடைய பிரதாபத்தைத் தாசருக்கு உணர்த்த எண்ணி வில்லில் நாணேற்றித் தொடுக்க, அது அருகிலுள்ள மரக்கிளையொன்றில் தைத்து நிற்கின்றது. தாசர் புன்சிரிப்புடன் 'நீ செல்லவிருக்கும் தக்ஷிண திசையிலுள்ள படைவீரன் ஒருவனிடம் நான் கற்ற சிறு வில் வித்தையை உனக்கு காண்பிக்கின்றேன் என்று கூறுகின்றார்.

அவனிடமிருந்த வில்லையே வாங்கி முதல் அம்பினைத் தொடுக்க, அது மின்னலெனப் பாய்ந்து முன்னர் தைத்திருந்த அம்பினை மீண்டும் இழுத்து வருகின்றது, இரண்டாவது அம்பினை எய்கின்றார், அது கண்ணிமைக்கும் நேரத்தில் அம்மரத்திலுள்ள அனைத்து இலைகளையும், ஒரு இலை கூட மிச்சமில்லாமல் துளைத்துச் செல்கின்றது. படைத்தலைவனுக்கு பெரும் அதிர்ச்சி, தேஜோமயமாய் நின்றிருக்கும் தாசரை அச்சத்துடன் பார்க்கின்றான், 'ஒரு சாதாரண வீரனிடம் கற்றேன் என்று கூறும் இவரது கலைக்கே இவ்வளவு வீரியம் இருக்குமானால் தக்ஷிண தேச வீரர்கள் ஒருசேரத் திரண்டு வந்தால் என்னாவது? இன்னும் ஒரு கணம் இங்கு நின்றிருந்தால் இவர் மற்றுமொரு அம்பினால் என் படை முழுவதையும் அழிக்கக் கூடுமே' என்று படைகளோடு வந்த வழியே ஓட்டமெடுக்கின்றான்.

சமர்த்த ராமதாசர் (பண்டரிபுரத்தில் பெற்ற இராம தரிசனம்):

சமர்த்த ராமதாசர் வனத்தில் சீடரொருவருடன் தங்கியிருந்த சமயத்தில் அடியவர்கள் பலர் நாமதேவரின் அபங்கங்களைப் பாடியாடியவாறே பண்டரிபுர ஷேத்திரத்திற்கு சென்று கொண்டிருப்பதைக் காண்கின்றார். 'எந்நேரமும் இராம நாம தியானத்திலிருக்கும் நமக்கெதற்கு பண்டரிபுர தரிசனம்?' என்றெண்ணுகின்றார். பண்டரிநாதர் அப்படி எல்லாம் இருக்க விட்டு விடுவாரா என்ன? அந்தணரொருவரின் வடிவில் தாசரிடம் சென்று பண்டரிபுர தலத்தின் மேன்மையினைப் பலவாறு எடுத்துரைக்கின்றார். தாசர் 'உங்கள் பாண்டுரங்கன் எமக்கு ஸ்ரீராமராக காட்சி தருவதாக இருந்தால் யாம் வருவோம்' என்றுரைக்க, அந்தணரும் அவ்வாறே தருவார், தாம் உடனே புறப்படுங்கள்' என்று உறுதி கூறி தாசரை அழைத்துச் செல்கின்றார்.  

பண்டரிபுர எல்லைக்குள் பிரவேசித்ததும் இனம் புரியாதவொரு உணர்வு தோன்றுகின்றது தாசருக்கு, தன்னிலை மறந்து 'பண்டரிநாதா! விட்டலா!!' என்கின்றார். ஸ்ரீவைகுந்தம் போல் சிறப்புற்று விளங்கும் பண்டரிபுரத்தினைத் தரிசித்து வியக்கின்றார். சந்திரபாகா நதியில் நீராடித் திருமண் தரித்து ஆலயத்திற்குள் செல்கின்றார். கருவறையில் திருஇடையில் திருக்கரங்களை வைத்து ஆனந்தத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கும் பாண்டுரங்கனையும் ருக்மிணிப் பிராட்டியாரையும் அகம் குழைந்து சேவிக்கின்றார்; உச்சி கூப்பிய கையினராய் 'பாண்டுரங்கா! கருணைக் கடலே! அடியேனுக்கு பட்டாபிஷேக இராமராக திருக்காட்சி தந்து அருள்வாய் ஐயனே' என்று வேண்டிப் பணிகின்றார்.  

கருவறையில் பேரொளிப் பிரகாசமொன்று தோன்றுகின்றது. பண்டரிநாதர் தரிசனம் மறைந்து 'சீதா தேவி; லக்ஷ்மணன்; அனுமன் சமேதராய் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஆனந்தத் திருக்கோலத்தைக் கண்ணார தரிசிக்கின்றார், ஆடிப்பாடித் தொழுது மகிழ்கின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!.

சமர்த்த ராமதாசரும், துக்காராம் சுவாமிகளும் சந்தித்த அற்புத நிகழ்வு:

துக்காராம் சுவாமிகளும், சமர்த்த ராமதாசரும் சமகாலத்து அருளாளர்கள், 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானச் சுடர்கள். சத்ரபதி சிவாஜி மன்னர் இவ்விரு குருநாதர்களின் திருவடிகளில் கொண்டிருந்த பக்தியையும், அபிமானத்தையும் விவரிக்க ஆயிரம் பதிவுகளும் போதாது. சிவாஜி மன்னர் தன் மந்திர உபதேச குருநாதரான ராமதாசருக்கென, பூனேவிற்கு 100 கி.மீ  தொலைவிலுள்ள சத்தாரா நகரத்தில், சஜ்ஜன்கட் என்று குறிக்கப் படும் மலையுச்சியில், ஒரு திருமடத்தைக் கட்டுவித்து அதனை அவருக்குச் சமர்ப்பிக்கப் பெரியதொரு விழாஎடுக்கவும் ஏற்பாடு செய்கின்றார். 
குறிப்பிட்ட சுபதினத்தில் விழாவிற்கு ஒப்புவமையற்ற இரு குருநாதர்களும் வருகை புரிகின்றனர். அருகிலுள்ள அனைத்து ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த பஜனை மண்டலியில் கலந்து கொள்கின்றனர், எங்கு நோக்கினும் தோரணங்கள், விளக்குகள், பஜனைகள் என்று அவ்விடமே வைகுந்தம் போன்று காட்சி அளிக்கின்றது. 10 நாட்களுக்கு, துக்காராம் சுவாமிகளின் பாகவத உபன்யாசம் மற்றும் நாம சங்கீர்த்தனம், ராமதாஸரின் ராமாயண பிரவசனம் என்று பிரம்மோத்சவம் போல் வைபவங்கள் யாவும் சிறப்புற நடந்தேறுகின்றன. பரம புண்ணியமான இந்த உற்சவத்தில் இரு குருநாதர்களும் அனைவருக்கும் விசேஷ அனுக்கிரகம் புரிந்து ஆசி கூறுகின்றனர்.

த்ரயோதசாக்ஷரி மந்திரம்:

ஆஞ்சநேயப் பிரபுவின் பரிபூரண அம்சமாக 17ஆம் நூற்றாண்டில் அவதரித்த சமர்த்த ராமதாசர் தன் அவதாரக் காலம் முழுவதும் உபாசித்ததும், உபதேசித்ததும் 'ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம' எனும் த்ரயோதசாக்ஷரி மந்திரத்தையே, ராமாவதார காலத்தில் அஞ்சனை மைந்தரான அனுமன் ஜபித்து வந்த ஒப்பற்ற மந்திரமும் இதுவேயாகும்.

பக்த கபீர்தாசர் (இஸ்லாமிய மரபில் தோன்றிய இந்து ஞானி):

14ஆம் நூற்றாண்டில் காசியில் தோன்றிய அருளாளர் கபீர்தாசர், துவாபர யுகத்தில் வேத வியாசரின் புத்திரராக அவதரித்த சுகப் பிரம்மத்தின் நேரடி கலியுக அவதாரமே கபீர்தாசர் என்று 'மகா பக்த விஜயம்' நமக்கு அறிவிக்கின்றது. பரீஷித் மன்னருக்கு ஏழு நாட்கள் ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்த, கிளி முகம் கொண்டிருந்த சுக ரிஷியும் இவரே. பாற்கடல் வாசனாரான பரந்தாமன் 'இராம நாம' வைபவத்தை இப்புவியில் நிலைபெறச் செய்யவும், மத நல்லிணக்கத்தை உருவாக்கவும் சுக ரிஷியை இஸ்லாமிய மரபில் அவதரிக்கச் செய்கின்றார். பண்டரிபுர மரபின் குருநாதர்களான ஞானேஸ்வரர் மற்றும் நாமதேவர் ஆகியோரின் சமகாலத்து அருளாளர் கபீர்தாசர், இவர்கள் மூவரும் சந்தித்துள்ள பல்வேறு சுவையான நிகழ்வுகளைப் பக்த விஜயம் பதிவு செய்கின்றது. 

இளம் பிராயம் முதலே கபீருக்கு இயல்பாகவே இராம நாமத்தின் மீது அதீத ஈடுபாடும் பக்தியும் தோன்றுகின்றது. இறைவனின் தன்மை, பிறவி மற்றும் கர்மவினைக் கோட்பாடுகள் குறித்து இவர் எழுப்பிய கேள்விகளுக்கு இவருடைய சமூகத்தில் எவரிடமிருந்தும் சரியான விடைகள் கிடைக்கவில்லை. மறுபிறவியும் கர்மவினை தொடர்ச்சியும் இல்லாதிருந்தால் சிலர் மட்டும் ஏழைகளாகவும், உடல் ஊனமுற்றவர்களாகவும் பிறக்க வாய்ப்பேயில்லை, ஆதலின் மறுபிறவி என்பது சத்தியமே என்று இஸ்லாமிய குருமார்களிடம் வாதிடுவார். 'இறைவனுக்கு இயல்பில் உருவம் இல்லை' என்பதும் உண்மை, 'ஆன்மாக்கள் உணர்ந்து உய்வு பெறும் பொருட்டு பரம்பொருளான இறைவன் பற்பல திருவடிவங்களில் தோன்றுகின்றான்' என்பதும் சத்தியமே என்று உறுதிபடக் கூறி வருவார். 

'தாய் போல் இரத்தத்தைப் பாலாக்கித் தரும் பசு இனத்தினைக் கொல்லுதல் பெரும் பாவம்' என்று அகிம்சை பிரச்சாரம் புரிந்து வரும் கபீரை இவரது சமூகத்தினர் புறந்தள்ளுகின்றனர். இருப்பினும் கபீர் எவரொருவரையும் பகைத்ததில்லை, இராமானந்தர் எனும் வைதீக குருவிடம் 'இராம நாம' உபதேசம் பெற்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பிரத்யட்சமாய் பன்முறை தரிசித்து மகிழ்ந்துள்ளார். இவரின் மேன்மையினை உணர்ந்து பிற்காலத்தில் இந்து; இஸ்லாம் இரு மரபிலிருந்தும் இவருக்குப் பல சீடர்கள் உருவாகின்றனர். இவரின் புதல்வரான கமால் பாகவத தர்மத்தில் தந்தைக்குச் சமமானவராக விளங்குகின்றார். பலகாலம் வாழ்ந்து இராமேஸ்வரம்; பண்டரிபுரம் முதலிய பல்வேறு ஷேத்திரங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு இராமநாம சங்கீர்த்தனத்தின் மேன்மையினைப் பாரத தேசமெங்கிலும் செழிக்கச் செய்து, மத நல்லிணக்கத்தையும் போதித்துப் பின் ஸ்ரீவைகுந்தம் சேர்கின்றார்.

பக்த புரந்தரதாசர் (ஸ்ரீநிவாசப் பெருமான் திருநடமாடிய அற்புத நிகழ்வு):

நாரத மகரிஷியின் கலியுக அவதாரமாக 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய அருளாளர் புரந்தரதாசர், இயற்பெயர் ரகுநாதர், வட்டிக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு பணம்; பொருள் என்று உலகியலிலேயே லயித்திருந்த ரகுநாதரைப் பாண்டுரங்கன் தடுத்தாட்கொண்டு ஞான மார்க்கத்துக்கு மடை மாற்றி விடுகின்றார். இவருக்குப் புரந்தரதாசர் எனும் திருநாமம் அமைந்த சுவையான நிகழ்வினை இனிக் காண்போம்,

ஒரு சமயம் ரகுநாதர் தன் மனைவி லக்ஷ்மிபாயுடன் தலயாத்திரையாக ஏழுமலையானின் வாசஸ்தலமான திருப்பதி தலத்திற்குச் செல்கின்றார். அங்கு புரந்தரி எனும் பரம பாகவதையின் இல்லத்தில் தங்கியிருந்தவாறே வேங்கடேசப் பெருமானைப் பாமாலைகளால் போற்றி வருகின்றார். இந்நிலையில் அனுதினமும் நள்ளிரவு வேளையில் புரந்தரி நன்கு அலங்கரித்துக் கொண்டு, கால்களில் சலங்கையுடனும், கைகளில் வீணையுடனும் புறப்பட்டுச் செல்வதைக் காண்கின்றார். 'இந்த பெண்மணி எங்கு தான் செல்கின்றார்?' என்று அறிந்து கொள்ள ரகுநாதருக்குப் பெரும் ஆவல்.      
ஒரு நாள் இரவு அது குறித்து நேரடியாக கேட்டும் விடுகின்றார், புரந்தரி சிறிது தயங்கி 'சுவாமி! தாங்கள் பாண்டுரங்கனின் பரிபூரணக் கடாட்சம் பெற்ற பரம பாகவதர் என்பதால் இந்த ரகசியத்தைக் கூறுகின்றேன். அனுதினமும் ஆலயத்தில் நடை சார்த்திய பின்னர் வேங்கடவனின் சன்னிதி வாயில் முன்பு சென்று வீணையை மீட்டுவேன், திருவருளால் கதவுகள் திறந்து கொள்ளும். ஸ்ரீநிவாசப் பெருமான் அடியவளின் மீதுள்ள அளப்பரிய கருணையால் நேரில் எழுந்தருளி வருவார், அடியவள் வீணையில் மீட்டும் இசைக்கேற்ப பதம் பிடித்துப் பரதமாடுவார். பின்னர் பெருமான் வீணையை மீட்டி இசைக்க அடியவள் ஆடுவேன். இத்திருத்தொண்டைப் பல காலமாகச் செய்து வருகின்றேன்' என்று கூறுகின்றாள். 
ரகுநாதர் 'இப்படியும் ஒரு பக்தியா!' என்று உளமுருகி 'அம்மா! தாம் அடியவனுக்கும் வேங்கடவனைத் தரிசனம் செய்விக்க வேண்டும்' என்று பணிவுடன் விண்ணப்பிக்கப் புரந்தரியும் சம்மதிக்கின்றாள். வீணையிசையால் வழக்கம் போல் திருக்கதவுகள் திறக்கின்றன, புரந்தரியுடன் உள்ளே செல்லும் ரகுநாதர் தான் மட்டும் தூணின் பின்னே மறைந்து கொள்கின்றார். திருமலை நாயகன் கோடி சூர்யப் பிரகாசத்துடன் தோன்றுகின்றார்,  ஏதுமறியாதவர் போலப் புன்முறுவலுடன் புரந்தரியின் இசைக்கேற்ப திருநடமிடுகின்றார். பின்னர் தன் முறை வரும் பொழுது பரந்தாமன் வேண்டுமென்றே அபஸ்வரமாகப் பாடத் துவங்க அதனைப் பொறுக்க மாட்டாது தூண் மறைவிலிருந்து வெளிப்பட்டு வருகின்றார் ரகுநாதர். திருமலை தெய்வத்தின் திருவடிகளைத் தொழுதேத்துகின்றார்.

வேங்கடவனும் திருவுள்ளம் கனிந்து 'ரகுநாதா! நீ புரந்தரியிடம் ஞான உபதேசம் பெற்றுப் புரந்தரதாசர் எனும் நாமத்துடன் நாம சங்கீர்தன வைபவத்தைப் புவியெங்கும் பிரகாசிக்கச் செய்து நம்மை வந்தடைவாய்' என்று ஆசி கூறி மறைகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே).