துக்காராம் சுவாமிகளும், சமர்த்த ராமதாசரும் சமகாலத்து அருளாளர்கள், 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானச் சுடர்கள். சத்ரபதி சிவாஜி மன்னர் இவ்விரு குருநாதர்களின் திருவடிகளில் கொண்டிருந்த பக்தியையும், அபிமானத்தையும் விவரிக்க ஆயிரம் பதிவுகளும் போதாது. சிவாஜி மன்னர் தன் மந்திர உபதேச குருநாதரான ராமதாசருக்கென, பூனேவிற்கு 100 கி.மீ தொலைவிலுள்ள சத்தாரா நகரத்தில், சஜ்ஜன்கட் என்று குறிக்கப் படும் மலையுச்சியில், ஒரு திருமடத்தைக் கட்டுவித்து அதனை அவருக்குச் சமர்ப்பிக்கப் பெரியதொரு விழாஎடுக்கவும் ஏற்பாடு செய்கின்றார்.
குறிப்பிட்ட சுபதினத்தில் விழாவிற்கு ஒப்புவமையற்ற இரு குருநாதர்களும் வருகை புரிகின்றனர். அருகிலுள்ள அனைத்து ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த பஜனை மண்டலியில் கலந்து கொள்கின்றனர், எங்கு நோக்கினும் தோரணங்கள், விளக்குகள், பஜனைகள் என்று அவ்விடமே வைகுந்தம் போன்று காட்சி அளிக்கின்றது. 10 நாட்களுக்கு, துக்காராம் சுவாமிகளின் பாகவத உபன்யாசம் மற்றும் நாம சங்கீர்த்தனம், ராமதாஸரின் ராமாயண பிரவசனம் என்று பிரம்மோத்சவம் போல் வைபவங்கள் யாவும் சிறப்புற நடந்தேறுகின்றன. பரம புண்ணியமான இந்த உற்சவத்தில் இரு குருநாதர்களும் அனைவருக்கும் விசேஷ அனுக்கிரகம் புரிந்து ஆசி கூறுகின்றனர்.
No comments:
Post a Comment