சிவ வில்லினை வளைத்த கோதண்ட இராமன் (எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்): கம்ப இராமாயணத் தேன் துளிகள்):

ஜனக மன்னன் மிதிலைச் செல்வியான அன்னை சீதைக்கென அமைத்திருந்த சுயம்வர மண்டபம், நடுநாயகமாய் பிரமாண்டமான சிவதனுசு, திண்தோளுடைய எண்ணிறந்த முடிமன்னர்கள் முழுமுனைப்புடன் முயன்றும் வில்லினை ஒருசிறிதும் அசைக்கக் கூட இயலவில்லை. ஜனகரின் முகத்திலோ புதல்வியின் எதிர்காலம் குறித்த கவலை. இக்கட்டான இச்சூழலில், விஸ்வாமித்திர முனிவரின் ஆணையினை ஏற்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அச்சிவ வில்லினை நோக்கிச் செல்கின்றார்.

அவையெங்கும் ஒரே நிசப்தம், தசரத மைந்தனின் திருமேனி வடிவழகில் ஈடுபட்டிருந்த அவையோர், கணநேரமும் கண் இமைக்காது 'மழை வண்ணத்து அண்ணலையே' பார்த்த வண்ணமிருக்கின்றனர். அவ்வளவு கவனமாக இருந்தும் அவர்களால் ஸ்ரீராமர் வில்லினை ஏந்தும் காட்சியை மட்டுமே காண முடிகின்றது, காற்றினும் கடிய வேகத்தில் இராகவன் வில்லின் ஒரு முனையினை ஊன்றிய நிகழ்வையோ, மறு முனையினை வளைத்து நாணேற்றிய செயலையோ எவரொருவரும் கண்டிலர். அண்டங்கள் யாவும் அதிர்வது போன்ற பேரொலியுடன் சிவ தனுசு முறிந்திருக்கும் காட்சி மட்டுமே இறுதியில் அவர்களுக்குக் காணக் கிடைக்கின்றது.
*
இனி மேற்குறித்துள்ள நிகழ்வு தொடர்பான கம்ப இராமாயணத் திருப்பாடலை உணர்ந்து இன்புறுவோம்,
-
தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!!!
-
(குறிப்பு: 'கடுப்பினில்' எனும் சொல் வேகத்தைக் குறிக்க வந்தது)

No comments:

Post a Comment