விஸ்வாமித்திரர், தான் புரியவிருக்கும் பெருவேள்வியை, அசுரர்களால் இடையூறு நேராத வண்னம் காத்துத் தரும் பொருட்டு, ஸ்ரீராமர்; இலக்குவன் இருவரையும், தசரத மன்னனின் அனுமதியுடன் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்கின்றார். வழியிலுள்ள தாடகா வனத்தில் விஸ்வாமித்திரரின் கட்டளையின் பேரில் கொடிய அரக்கியான தாடகையை ஸ்ரீராமர் வதம் புரிகின்றார். வேள்வி நன்முறையில் நடந்தேறுகின்றது, பின்னர் சனக மன்னரின் அழைப்பினை ஏற்று, அன்னை சீதையின் சுயம்வர விழாவினைக் கண்டு வாழ்த்த, தசரத மைந்தர்கள் இருவருடனும், அவ்விடத்தினின்றும் புறப்பட்டு மிதிலாபுரி நோக்கிச் செல்கின்றார்.
வழியில் 'முனி பத்தினியான அகலிகை கௌதம முனிவரின் சாபத்தினால் கல்லாக மாறியிருந்த ஆசிரமம்' எதிர்ப்படுகின்றது. விஸ்வாமித்திரர் அகலிகையின் வரலாற்றினைத் தெரிவித்துப் பின் 'கோசலை மைந்தனே! உன் திருவடிகளால் அங்குள்ள கல்லினைத் தீண்டுவாய்' என்கின்றார். ஸ்ரீராமரின் 'பிறவிப் பிணி போக்கும் திருவடித் துகள்கள்' சிறிதே அக்கல்லினைத் தீண்ட, அண்டங்கள் யாவும் வியந்து போற்றுமாறு அக்கல்லானது அகலிகையாக உருமாறுகின்றது. சாப விமோசனம் பெறும் அன்னை அகலிகை புண்ணியத் திருமூர்த்தியான ஸ்ரீராமரை நன்றிப் பெருக்குடன் பணிகின்றார். இனி இதுகுறித்த கவிச்சக்கரவர்த்தியின் அற்புதத் திருப்பாடலை உணர்ந்துப் போற்றுவோம்,
(பால காண்டம்: கம்ப இராமாயணம்):
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே,
உன் கைவண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்!
(சுருக்கமான பொருள்):
ஸ்ரீராமா! மழை வண்ணத்து அண்ணலே! அன்று தாடகை வத நிகழ்வில் உனது கை வண்ணத்தினைக் (திருத்தோள்களின் வலிமையை) கண்டு வியந்தேன், இன்று சிறு கல்லானது அகலிகையாக மாறிய அற்புத நிகழ்வின் மூலம் உன் கால் வண்ணத்தையும் (திருவடிப் பெருமையையும்) கண்ணுற்று மகிழ்ந்தேன். இத்தகு மேன்மையுடைய நீ இப்புவியில் அவதரித்துள்ள நிலையில் இனி எவரொருவரும் எக்காரணத்தினாலும் துன்புறவே மாட்டார் என்று விஸ்வாமித்திரர் போற்றுகின்றார்.
No comments:
Post a Comment