தோள் கண்டார் தோளே கண்டார் (கம்ப இராமாயணத் தேன் துளிகள்):

மிதிலை நகருக்குள் கோடி சூரியப் பிரகாசமாய் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, இலக்குவன் மற்றும் விஸ்வாமித்திர முனிவருடன் எழுந்தருளி வருகின்றார். திருவீதிகளெங்கும் கூடியிருந்த மகளிர் யாவரும் கோசலை மைந்தனின் திருமேனி வடிவழகினை வியந்து போற்றுகின்றனர். இராகவனின் திண்மையான திருத்தோள்களைக் கண்ணுறும் கன்னியர் அதனின்றும் பார்வையை விலக்க இயலாது அதனழகையே பருகிய வண்ணமிருக்கின்றனர். அது போன்றே வில்லேந்தும் அண்ணலின் தாமரை மலரனைய திருவடிகள் மற்றும் செம்மையுற விளங்கும் திருக்கைகள் ஆகிய அவயவங்களைத் தரிசிக்கும் மாதரும் அவற்றியிலேயே இலயித்துச் சிவானந்த வெள்ளத்தில் அமிழ்ந்திருக்கின்றனர்.

(பால காண்டம்: உலாவியற் படலம்: திருப்பாடல் 19):
தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண்டாரை ஒத்தார்!!!

இக்காரணத்தால் அப்பெண்டிருள் எவரொருவராலும் கோதண்ட மூர்த்தியின் திருமேனி வடிவழகு முழுவதையும் ஒருசேர தரிசிக்க இயலாது போகின்றது. இந்நிகழ்வு 'சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் எனும் இந்து தர்ம உட்பிரிவுகளின் வழி நிற்போர் அந்தந்த சமயம் முன்னிறுத்தும் தெய்வ வடிவத்தை மட்டுமே உபாசித்து, அதன் ஆனந்த அனுபவத்திலேயே இலயம் அடைந்து முழுநிறைவு கண்டு விடுவதை ஒத்திருக்கின்றது' என்று கவிச்சக்கரவர்த்தி உவமித்துக் காட்டுகின்றார் (சிவ சிவ).

No comments:

Post a Comment