பால இராமனுக்கு அருணகிரிநாதர் அருளியுள்ள பிள்ளைத் தமிழ் (திருச்செந்தூர் திருப்புகழ் நுட்பங்கள்):

வால்மீகி இராமாயணத்திலும், கம்ப இராமாயணத்திலும் ஸ்ரீராமரின் பால பருவ லீலைகள் பெரிதாக ஏனோ குறிக்கப் பெறவில்லை. இக்குறையினைத் தமிழ்க்கடவுளின் பரிபூரணக் கடாட்சம் பெற்றுள்ள அருணகிரிப் பெருமான் 'தொந்தி சரிய' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் போக்கியுள்ளார். அன்னை கோசலை 'தளர் நடைப் பருவத்திலுள்ள இராமனைப் பாலுண்ண வருமாறு பரிவுடன் அழைக்கும்' திருக்காட்சியினைப் பின்வரும் திருப்பாடலில் போற்றி மகிழ்கின்றார்.

(தொந்தி சரிய என்று துவங்கும் திருப்பாடலின் இறுதியில் இடம்பெறும் வரிகள்):
எந்தை வருக ரகுநாயகவருக
     மைந்த வருக மகனேஇனிவருக
          என்கண் வருக எனதாருயிர்வருக....அபிராம
-
இங்கு வருக அரசே வருகமுலை
     உண்க வருக மலர்சூடிடவருக
          என்று பரிவினொடு கோசலைபுகல....வருமாயன்
-
சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவுமழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவேரொடுமடிய....அடுதீரா
-
திங்களரவு நதிசூடியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்திநகரில் இனிதேமருவிவளர்...பெருமாளே.

'எந்தையே, ரகுநாயகா, மைந்தனே, மகனே, என் கண்ணே, எனதாருயிரே, எனதரசே' என்று கோசலையன்னை பலவாறு கொஞ்சி மகிழும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மருமகனே, திங்கள் சூடிய சிவபரம்பொருள் தந்தருளிய குமரனே, அலைகள் எந்நேரமும் கரையினை மோதிய வண்ணமிருக்கும் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளியுள்ள செந்தில் வேலவனே என்று போற்றித் திருப்பாடலினை நிறைவு செய்கின்றார் திருப்புகழ் ஆசிரியர்.

No comments:

Post a Comment