இந்து தர்மம் - வைணவம்:
ஸ்ரீரங்க விமானம் தோன்றிய அற்புத வரலாறு:
இஷ்வாகுவின் காலத்திற்குப் பிறகு அந்த வம்சத்தினர் வழிவழியாய்ப் பெரிய பெருமாளைப் பூசித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, திரேதா யுகம் முடிவுற சுமார் 11,000 ஆண்டுகளே மீதமிருக்கும் காலகட்டத்தில், இஷ்வாகு வம்சத்தில் அவதரிக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருவரங்கப் பெருமானைப் பூசித்து வருகின்றார்.
இராவண வதத்திற்குப் பின் நடந்தேறும் பட்டாபிஷேக வைபவத்தில் விபீஷணருக்கு ஸ்ரீரங்க விமானத்தினைத் தன்னுடைய அன்புப் பரிசாக அளித்து மகிழ்கின்றார் ஸ்ரீராமர். பெருமகிழ்வுடன் திருவரங்கனுடன் ஆகாய மார்க்கமாய் இலங்கை நோக்கிப் பயணிக்கின்றார் விபீஷணர், தென்பகுதியிலுள்ள காவிரிப் பகுதியைக் கடக்கையில், அனுஷ்டானத்தின் பொருட்டு விமானத்துடன் தரையிறங்குகின்றார். அப்பகுதியினை ஆண்டு வரும் தர்மவர்மன் விபீஷணரை எதிர்கொண்டு வரவவேற்கின்றார், காவிரிக் கரையருகிலேயே அரங்கனுக்குப் உத்சவம் நடத்துவிக்க அனுமதி கோருகின்றார்.
இவ்வாறாகத் திருவரங்கனுக்கு ஆதி பிரம்மோத்சவம் பங்குனி மாதத்தில் சிறப்புற நடந்தேறுகிறது. உத்சவ முடிவில் விபீஷணர் எவ்வளவு முயன்றும் ஸ்ரீரங்க விமானம் அசைய மறுக்கின்றது, கருணைக் கடலான திருவரங்க மூர்த்தி தான் அவ்விடத்திலேயே எழுந்தருள இருப்பதாக அறிவித்து அருள்கின்றார். பெரிதும் மகிழும் தர்மவர்மரும் அவ்விடத்திலேயே ஆலயமொன்றினை அமைகின்றார்.
இந்நிகழ்வு நடந்தேறி பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கால மாற்றத்தினால் உண்டாகும் வெள்ளப் பெருக்கினால் அலையுண்டுப் பின் நிலத்தில் முழுவதுமாய் புதையுண்டும் விடுகிறது. மேலும் எண்ணிறந்த ஆண்டுகள் கடந்த பின்னர் அவ்விடத்திற்கு வருகை புரியும் கிள்ளிவளவன் எனும் மன்னன் 'இரு தெய்வீகக் கிளிகளின் உரையாடல் மூலம்' ஸ்ரீரங்க விமானம் அப்பகுதியில் புதையுண்டிருப்பதை அறிகின்றான். திருவரங்கனும் அரசனின் கனவினில் தோன்றித் தான் இருக்குமிடத்தினைக் காண்பித்து அருள்கின்றார்.
திருவரங்கனின் திருவருள் திறத்தினை வியந்து போற்றும் கிள்ளிவளவன் ஸ்ரீரங்க விமானத்தை மீட்டெடுத்து அவ்விடத்திலேயே அறிதுயில் கொண்டருளும் பரந்தாமனுக்கு ஆலயமொன்றினைப் புதுக்குகின்றான். பின்னர் வழிவழியாய் அப்பகுதியினை ஆண்டு வருவோரும் மற்றோரும் திருவரங்கத் திருக்கோயிலுக்குத் திருப்பணி புரிந்து வருகின்றனர். இத்தகு சீர்மை பொருந்திய ஸ்ரீரங்க ஷேத்திரத்தின் பிரபாவத்தினை ஆயிரம் பதிவுகளினாலும் முழுவதும் விவரித்து விட இயலாது (நமோ நாராயணாய)!!!
ஏரி காத்த இராமர் திருக்கோயில் (மதுராந்தகம்):
மதுராந்தகத்தின் மையத்தில் அமைந்துள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில். எண்ணிறந்த திருச்சன்னிதிகளோடு கூடிய பிரமாண்டமான ஆலய வளாகம், மூலக் கருவறையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி; அன்னை சீதை; இலக்குவன் ஆகியோர் நெடிதுயர்ந்த திருமேனிகளில் எழுந்தருளி இருக்கின்றனர், ஸ்ரீராமர் மிதிலைச் செல்வியின் திருக்கரங்களைப் பற்றியவாறு திருக்காட்சி அளிப்பது வேறெங்கிலுமில்லாத தனிச்சிறப்பாகும், காண்பதற்கரிய ஆச்சரியத் திருக்கோலம்.
இராவண சம்ஹாரத்திற்குப் பின்னர் அன்னை ஜானகி தேவியுடன் அயோத்தி திரும்புகையில், ரிஷ்ய சிருங்க முனிவரின் தந்தையாரான விபாண்டகரை இத்தலத்தில் சந்தித்துச் சென்றதாக தலபுராணம் அறிவிக்கின்றது. விபாண்டகர் பூசித்த கருணாகரப் பெருமாளும் பிரதான உற்சவ மூர்த்தியாய் மூலக் கருவறையில் எழுந்தருளி இருக்கின்றார்.
ஸ்ரீராமானுஜர் பெரிய நம்பிகள் எனும் ஆச்சாரியாரைத் தரிசிக்கக் காஞ்சியிலிருந்து பயணித்து வர, நம்பிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து ராமானுஜருக்கு அனுக்கிரகம் புரியப் பயணித்து வர, இருவரும் வகுளாரண்ய ஷேத்திரமான இத்தலத்தில் எதிர்கொள்கின்றனர். இத்திருக்கோயிலிலுள்ள பஞ்ச சமஸ்கார மண்டபத்திலேயே பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு வைணவ முறைப்படி தீக்ஷை அளிக்கின்றார். நம்பிகள் ராமானுஜரின் திருத்தோள்களில் பொறிப்பதற்குப் பயன்படுத்திய சிறிய சங்கு; சக்கரப் பொறிகளை உடையவர் சன்னிதியில் நமக்கு தரிசனம் செய்து வைக்கின்றனர், பரம பாக்கியம்.
மற்றொரு நிகழ்வு, அப்பொழுது 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலக் கட்டம் (1798ஆம் ஆண்டு), மதுராந்தக ஏரி பெருமழையால் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயச் சூழல், அச்சமயத்தில் கலெக்டராக இருந்து வந்த கொலோனியல் பிளேஸ் என்பவர் நிலைமையின் தீவிரத்தைக் கண்காணிக்க மதுராந்தகத்த்திற்குச் சில நாட்கள் சென்று தங்குகின்றார். ஆலயத்துள் இருந்த ஏராளமான கற்களைக் கண்ட பிளேஸ் அவற்றினை வைத்து ஏரியின் கரையை ஒருபுறமாக அடைக்குமாறு ஆணையிடுகின்றார், அவ்வூர் மக்களோ 'அவை தாயார் சன்னிதியைப் புதுப்பிப்பதற்காக வைக்கப் பட்டுள்ளன' என்று கூற 'அவ்விதமெனில் உங்கள் இராமருக்குச் சக்தியிருந்தால் ஏரி உடையாமல் அவரே காத்திருக்கலாமே' என்று கூறிச் செல்கின்றார்.
அன்று நடுநிசி, பிளேசுக்கோ உறக்கமில்லை, மீண்டுமொரு முறை ஏரியைப் பார்வையிடச் செல்கின்றார், அத்தருணத்தில் கோடி சூர்ய பிரகாசமாய் வில்லேந்திய இரு வீரர்கள் ஏரியின் மேல், விண்ணில் நின்றவண்ணம் தங்களுடைய அம்புகளால் ஏரியைச் சுற்றி வேலியொன்று அமைப்பதாகக் கண்டு பெரு வியப்புறுகின்றார், அவர்கள் ஸ்ரீராம இலட்சுமணர்களே என்று தெளிந்துத் தம்முடைய மத வழக்கப்படி மண்டியிட்டு வணங்குகின்றார், சில கணங்களில் அத்திருக்காட்சி மறைந்து விடுகின்றது. மறுநாள் ஏரியின் வெள்ளப்பெருக்கு முற்றிலுமாய் அடங்கி அபாயச் சூழல் நீங்கியிருந்தது.
அந்த நன்றிக் கடனுக்காக பிளேஸ் தாயார் சன்னிதியின் முழுச் செலவையும் தானே ஏற்று நன்முறையில் புதுப்பித்துக் கொடுக்கின்றார், இந்த வரலாற்றுச் செய்தி தாயார் சன்னிதிப் பிரகாரத்தில் பொறிக்கப் பெற்றுள்ளது. அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.
தோள் கண்டார் தோளே கண்டார் (கம்ப இராமாயணத் தேன் துளிகள்):
(பால காண்டம்: உலாவியற் படலம்: திருப்பாடல் 19):
தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண்டாரை ஒத்தார்!!!
இக்காரணத்தால் அப்பெண்டிருள் எவரொருவராலும் கோதண்ட மூர்த்தியின் திருமேனி வடிவழகு முழுவதையும் ஒருசேர தரிசிக்க இயலாது போகின்றது. இந்நிகழ்வு 'சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் எனும் இந்து தர்ம உட்பிரிவுகளின் வழி நிற்போர் அந்தந்த சமயம் முன்னிறுத்தும் தெய்வ வடிவத்தை மட்டுமே உபாசித்து, அதன் ஆனந்த அனுபவத்திலேயே இலயம் அடைந்து முழுநிறைவு கண்டு விடுவதை ஒத்திருக்கின்றது' என்று கவிச்சக்கரவர்த்தி உவமித்துக் காட்டுகின்றார் (சிவ சிவ).
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் (கம்ப இராமாயணத் தேன் துளிகள்):
வழியில் 'முனி பத்தினியான அகலிகை கௌதம முனிவரின் சாபத்தினால் கல்லாக மாறியிருந்த ஆசிரமம்' எதிர்ப்படுகின்றது. விஸ்வாமித்திரர் அகலிகையின் வரலாற்றினைத் தெரிவித்துப் பின் 'கோசலை மைந்தனே! உன் திருவடிகளால் அங்குள்ள கல்லினைத் தீண்டுவாய்' என்கின்றார். ஸ்ரீராமரின் 'பிறவிப் பிணி போக்கும் திருவடித் துகள்கள்' சிறிதே அக்கல்லினைத் தீண்ட, அண்டங்கள் யாவும் வியந்து போற்றுமாறு அக்கல்லானது அகலிகையாக உருமாறுகின்றது. சாப விமோசனம் பெறும் அன்னை அகலிகை புண்ணியத் திருமூர்த்தியான ஸ்ரீராமரை நன்றிப் பெருக்குடன் பணிகின்றார். இனி இதுகுறித்த கவிச்சக்கரவர்த்தியின் அற்புதத் திருப்பாடலை உணர்ந்துப் போற்றுவோம்,
(பால காண்டம்: கம்ப இராமாயணம்):
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே,
உன் கைவண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்!
(சுருக்கமான பொருள்):
ஸ்ரீராமா! மழை வண்ணத்து அண்ணலே! அன்று தாடகை வத நிகழ்வில் உனது கை வண்ணத்தினைக் (திருத்தோள்களின் வலிமையை) கண்டு வியந்தேன், இன்று சிறு கல்லானது அகலிகையாக மாறிய அற்புத நிகழ்வின் மூலம் உன் கால் வண்ணத்தையும் (திருவடிப் பெருமையையும்) கண்ணுற்று மகிழ்ந்தேன். இத்தகு மேன்மையுடைய நீ இப்புவியில் அவதரித்துள்ள நிலையில் இனி எவரொருவரும் எக்காரணத்தினாலும் துன்புறவே மாட்டார் என்று விஸ்வாமித்திரர் போற்றுகின்றார்.
பால இராமனுக்கு அருணகிரிநாதர் அருளியுள்ள பிள்ளைத் தமிழ் (திருச்செந்தூர் திருப்புகழ் நுட்பங்கள்):
(தொந்தி சரிய என்று துவங்கும் திருப்பாடலின் இறுதியில் இடம்பெறும் வரிகள்):
எந்தை வருக ரகுநாயகவருக
மைந்த வருக மகனேஇனிவருக
என்கண் வருக எனதாருயிர்வருக....அபிராம
-
இங்கு வருக அரசே வருகமுலை
உண்க வருக மலர்சூடிடவருக
என்று பரிவினொடு கோசலைபுகல....வருமாயன்
-
சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவுமழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவேரொடுமடிய....அடுதீரா
-
திங்களரவு நதிசூடியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்திநகரில் இனிதேமருவிவளர்...பெருமாளே.
'எந்தையே, ரகுநாயகா, மைந்தனே, மகனே, என் கண்ணே, எனதாருயிரே, எனதரசே' என்று கோசலையன்னை பலவாறு கொஞ்சி மகிழும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மருமகனே, திங்கள் சூடிய சிவபரம்பொருள் தந்தருளிய குமரனே, அலைகள் எந்நேரமும் கரையினை மோதிய வண்ணமிருக்கும் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளியுள்ள செந்தில் வேலவனே என்று போற்றித் திருப்பாடலினை நிறைவு செய்கின்றார் திருப்புகழ் ஆசிரியர்.
சிதம்பரம் திருப்புகழில் அகலிகை சாப விமோசன நிகழ்வு:
கல்லிலே பொற்றாள் படவேயது
நல்ல ரூபத்தேவர கானிடை
கெளவை தீரப் போகும்இராகவன் மருகோனே
கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாக மாறி துன்பமுற்றிருந்த அன்னை அகலிகை, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பொன் போலும் திருவடிகள் சிறிதே தீண்டப் பெற்ற நன்மையினால் சாப விமோசனமுற்று மீண்டும் தன் பண்டைய திவ்யத் திருமேனியோடு வெளிப்பட்ட அற்புத நிகழ்வினைப் போற்றுகின்றார் அருணகிரிப் பெருமான்.
சிவ வில்லினை வளைத்த கோதண்ட இராமன் (எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்): கம்ப இராமாயணத் தேன் துளிகள்):
அவையெங்கும் ஒரே நிசப்தம், தசரத மைந்தனின் திருமேனி வடிவழகில் ஈடுபட்டிருந்த அவையோர், கணநேரமும் கண் இமைக்காது 'மழை வண்ணத்து அண்ணலையே' பார்த்த வண்ணமிருக்கின்றனர். அவ்வளவு கவனமாக இருந்தும் அவர்களால் ஸ்ரீராமர் வில்லினை ஏந்தும் காட்சியை மட்டுமே காண முடிகின்றது, காற்றினும் கடிய வேகத்தில் இராகவன் வில்லின் ஒரு முனையினை ஊன்றிய நிகழ்வையோ, மறு முனையினை வளைத்து நாணேற்றிய செயலையோ எவரொருவரும் கண்டிலர். அண்டங்கள் யாவும் அதிர்வது போன்ற பேரொலியுடன் சிவ தனுசு முறிந்திருக்கும் காட்சி மட்டுமே இறுதியில் அவர்களுக்குக் காணக் கிடைக்கின்றது.
*
இனி மேற்குறித்துள்ள நிகழ்வு தொடர்பான கம்ப இராமாயணத் திருப்பாடலை உணர்ந்து இன்புறுவோம்,
-
தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!!!
-
(குறிப்பு: 'கடுப்பினில்' எனும் சொல் வேகத்தைக் குறிக்க வந்தது)