மதுராந்தகத்தின் மையத்தில் அமைந்துள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில். எண்ணிறந்த திருச்சன்னிதிகளோடு கூடிய பிரமாண்டமான ஆலய வளாகம், மூலக் கருவறையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி; அன்னை சீதை; இலக்குவன் ஆகியோர் நெடிதுயர்ந்த திருமேனிகளில் எழுந்தருளி இருக்கின்றனர், ஸ்ரீராமர் மிதிலைச் செல்வியின் திருக்கரங்களைப் பற்றியவாறு திருக்காட்சி அளிப்பது வேறெங்கிலுமில்லாத தனிச்சிறப்பாகும், காண்பதற்கரிய ஆச்சரியத் திருக்கோலம்.
இராவண சம்ஹாரத்திற்குப் பின்னர் அன்னை ஜானகி தேவியுடன் அயோத்தி திரும்புகையில், ரிஷ்ய சிருங்க முனிவரின் தந்தையாரான விபாண்டகரை இத்தலத்தில் சந்தித்துச் சென்றதாக தலபுராணம் அறிவிக்கின்றது. விபாண்டகர் பூசித்த கருணாகரப் பெருமாளும் பிரதான உற்சவ மூர்த்தியாய் மூலக் கருவறையில் எழுந்தருளி இருக்கின்றார்.
ஸ்ரீராமானுஜர் பெரிய நம்பிகள் எனும் ஆச்சாரியாரைத் தரிசிக்கக் காஞ்சியிலிருந்து பயணித்து வர, நம்பிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து ராமானுஜருக்கு அனுக்கிரகம் புரியப் பயணித்து வர, இருவரும் வகுளாரண்ய ஷேத்திரமான இத்தலத்தில் எதிர்கொள்கின்றனர். இத்திருக்கோயிலிலுள்ள பஞ்ச சமஸ்கார மண்டபத்திலேயே பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு வைணவ முறைப்படி தீக்ஷை அளிக்கின்றார். நம்பிகள் ராமானுஜரின் திருத்தோள்களில் பொறிப்பதற்குப் பயன்படுத்திய சிறிய சங்கு; சக்கரப் பொறிகளை உடையவர் சன்னிதியில் நமக்கு தரிசனம் செய்து வைக்கின்றனர், பரம பாக்கியம்.
மற்றொரு நிகழ்வு, அப்பொழுது 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலக் கட்டம் (1798ஆம் ஆண்டு), மதுராந்தக ஏரி பெருமழையால் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயச் சூழல், அச்சமயத்தில் கலெக்டராக இருந்து வந்த கொலோனியல் பிளேஸ் என்பவர் நிலைமையின் தீவிரத்தைக் கண்காணிக்க மதுராந்தகத்த்திற்குச் சில நாட்கள் சென்று தங்குகின்றார். ஆலயத்துள் இருந்த ஏராளமான கற்களைக் கண்ட பிளேஸ் அவற்றினை வைத்து ஏரியின் கரையை ஒருபுறமாக அடைக்குமாறு ஆணையிடுகின்றார், அவ்வூர் மக்களோ 'அவை தாயார் சன்னிதியைப் புதுப்பிப்பதற்காக வைக்கப் பட்டுள்ளன' என்று கூற 'அவ்விதமெனில் உங்கள் இராமருக்குச் சக்தியிருந்தால் ஏரி உடையாமல் அவரே காத்திருக்கலாமே' என்று கூறிச் செல்கின்றார்.
அன்று நடுநிசி, பிளேசுக்கோ உறக்கமில்லை, மீண்டுமொரு முறை ஏரியைப் பார்வையிடச் செல்கின்றார், அத்தருணத்தில் கோடி சூர்ய பிரகாசமாய் வில்லேந்திய இரு வீரர்கள் ஏரியின் மேல், விண்ணில் நின்றவண்ணம் தங்களுடைய அம்புகளால் ஏரியைச் சுற்றி வேலியொன்று அமைப்பதாகக் கண்டு பெரு வியப்புறுகின்றார், அவர்கள் ஸ்ரீராம இலட்சுமணர்களே என்று தெளிந்துத் தம்முடைய மத வழக்கப்படி மண்டியிட்டு வணங்குகின்றார், சில கணங்களில் அத்திருக்காட்சி மறைந்து விடுகின்றது. மறுநாள் ஏரியின் வெள்ளப்பெருக்கு முற்றிலுமாய் அடங்கி அபாயச் சூழல் நீங்கியிருந்தது.
அந்த நன்றிக் கடனுக்காக பிளேஸ் தாயார் சன்னிதியின் முழுச் செலவையும் தானே ஏற்று நன்முறையில் புதுப்பித்துக் கொடுக்கின்றார், இந்த வரலாற்றுச் செய்தி தாயார் சன்னிதிப் பிரகாரத்தில் பொறிக்கப் பெற்றுள்ளது. அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.